டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல்களை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய வகையில் இரு நாடுகளும் மீண்டும் வர்த்தக பேச்சு வார்த்தையை முன்னெடுத்து இருக்கின்றன .
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறிப்பிட்டு இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசாங்கம் 50 சதவீதம் இறக்குமதி வரியை விதித்திருக்கிறது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அமெரிக்க அரசாங்கம் இவ்வாறு செயல்பட்டது இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும் அமெரிக்கா அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை. மாறாக இந்தியா சீனா மற்றும் ரஷ்யாவிடம் தொடர்ந்து நெருக்கம் காட்டியது. இந்த சூழலில் தான் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடங்க இருக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவை சேர்ந்த வர்த்தக பேச்சுவார்த்தை குழுக்கான தலைவர் பிரண்டன் லின்ச் இந்தியாவிற்கு வருகை தருகிறார். செவ்வாய்க்கிழமை முதல் அவர் இந்திய தரப்பு அதிகாரிகளோடு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த முக்கியமான பேச்சுவார்த்தையின் நடத்துகிறார்.
இந்தியா சார்பாக வர்த்தக அமைச்சகத்தின் சிறப்பு செயலாளரான ராஜேஷ் அக்ரவால் கலந்து கொள்ள இருக்கிறார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல கட்டங்களாக வர்த்தக பேச்சுவார்த்தை என்பது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதமே இரு நாடுகளுக்கும் இடையே ஒரு இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தாகும் என சொல்லப்பட்டது.
அமெரிக்க தரப்பு தங்களுடைய வேளாண்மை மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை இந்திய சந்தையில் அனுமதிக்க வேண்டும் என கூறியதும் அதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததும் இந்த பேச்சுவார்த்தை தடைபடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இதற்கிடையில் தான் டிரம்ப்பும் இந்தியா மீது அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்தார். இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவிலும் கூட சிக்கல் ஏற்பட்டது.
தற்போது இந்த வர்த்தக பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் என நம்பப்படுகிறது. இந்தியாவிற்கு அமெரிக்க அதிகாரிகள் வருகை தந்த பேச்சு வார்த்தை நடத்துவதை போலவே அடுத்த கட்டமாக இந்திய தரப்பு அதிகாரிகள் அமெரிக்காவிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவார்கள் . இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கும் சாதகமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது இந்த வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் தற்போது இந்தியா மீது விதிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த 50% வரிவிலக்கில் இருந்து நிவாரணம் கிடைக்கும் இது இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதி துறை சார்ந்து இயங்கக்கூடிய நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications