கிரிக்கெட் போட்டிகள் என்றாலே இந்தியாவில் திருவிழா தான். அதுவும் இந்தியா இறுதிப் போட்டியில் கலந்து கொள்கிறது என்றால் ஒட்டுமொத்த நாடே கொண்டாட்டம் மனநிலைக்கு வந்துவிடும். அந்த வகையில் மார்ச் 8ஆம் தேதியான இன்று இந்தியாவில் விடுமுறை நாள் அல்ல கிரிக்கெட் நாள்.
டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் இன்று நடைபெற இருக்கின்றன. இந்திய நேரப்படி இன்று மாலை 7 மணிக்கு நடப்பு சாம்பியனான இந்தியா, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. சர்வதேச அளவில் டி20 போட்டியில் நம்பர் ஒன் அணியாக இந்தியா திகழ்கிறது. இந்த முறையும் இந்தியா கோப்பையை வெல்லுமா என அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் தான் இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் சொந்த மண்ணில் டி20 உலக கோப்பை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைக்கும், அதேவேளையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை டி20 உலக கோப்பை வென்ற அணி என்ற சாதனையும் படைக்கும்.
போட்டியில் வெற்றி பெறக்கூடிய அணிக்கு உலகக்கோப்பை மட்டுமல்ல பெரிய அளவிலான ரொக்கப் பரிசும் காத்திருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 உலக கோப்பை போட்டிக்கான பரிசு தொகையாக மட்டும் 13.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 124 கோடி ரூபாயை பரிசு தொகையாக வழங்க இருக்கிறது. இது 2024 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் வழங்கப்பட்ட பரிசு தொகையை விட 20 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டுகளை விட இந்த முறை டி20 உலக கோப்பை போட்டி விளம்பரங்கள் அதிகமாக கிடைத்தது பரிசு தொகை உயர்வதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதன்படி கோப்பையை வெல்லக்கூடிய அணி 27.48 கோடி ரூபாயை பரிசுத்தொகையாக வெல்லும். இறுதி போட்டியில் ரன்னர் அப் அதாவது இரண்டாவது இடம் பிடிக்கக் கூடிய அணி 1.6 மில்லியன் டாலர் இந்திய ரூபாயில் 14.65 கோடி பரிசு தொகையாக பெறும்.
எனவே இந்த இறுதிப் போட்டியில் வெற்றி அடைந்தாலும் தோல்வி அடைந்தாலும் இரண்டு அணிகளுக்குமே ஒரு கணிசமான பரிசுத்தொகை கிடைப்பது உறுதி. வெற்றியாளராக வரும் பட்சத்தில் அந்த அணிக்கு உலகக்கோப்பையோடு சேர்ந்து 27.48 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கிடைக்கும். இறுதிப்போட்டி மட்டுமல்ல இந்த போட்டியில் பங்கேற்ற பல்வேறு அணிகளுக்கும் கூட பரிசுத்தொகை கிடைக்க இருக்கிறது.
அரையிறுதி போட்டிகளில் பங்கேற்று தோல்வி அடைந்த அணிகளுக்கு தலா 7.24 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட இருக்கிறது. அடுத்ததாக சூப்பர் 8 பிரிவில் இடம் பிடித்த ஒவ்வொரு அணிக்கும் தளம் 3.48 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும். போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் தலா 2.29 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications