கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு உலக நாடுகளின் பொருளாதாரங்கள் மீண்டெழுந்து வருகின்றன. அதில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா விரைவில் 10 டிரில்லியன் பொருளாதாரம் என்ற நிலையை எட்டிவிடும் என உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் போர்ஜே பிரெண்ட் தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார மன்றம் (WEF): ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு உலக பொருளாதார மன்றம் செயல்பட்டு வருகிறது, பொது - தனியார் ஒத்துழைப்புக்கான ஒரு சர்வதேச அமைப்பான இது ஆண்டுதோறும் டாவோஸ் நகரில் ஜனவரி மாதத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டை நடத்துகிறது.

இந்தியாவின் பொருளாதார நிலை: உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் போர்ஜே பிரெண்ட் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். அதில் வரும் ஆண்டுகளில் 10 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக இந்தியா மாறி மூன்றாவது இடத்தை கைப்பற்றும் என கூறியுள்ளார்.
உலகின் அனைத்து பெரிய பொருளாதாரங்களிலும் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என தெரிவித்தார். நடந்து முடிந்த டாவோஸ் மாநாட்டில் இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகள் மீது அனைவரும் ஆர்வம் காட்டியதாகவும் , அடுத்தடுத்த மாநாடுகளிலும் இது தொடரும் என்றும் கூறினார்.
இந்தியாவில் புது நம்பிக்கை கிடைக்கிறது: இந்தியாவுக்கு வருகை தரும் போதெல்லாம் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் பெறுவதாக தெரிவித்துள்ள அவர், புவிசார் அரசியல் காரணமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவை பொறுத்தவரை 7% பொருளாதார வளர்ச்சியை காண்கிறோம் என தெரிவித்த அவர், உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறதென கூறினார். அடுத்த 2-3 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக குறிப்பாக 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாக்குவதை இந்தியா இலக்காக கொண்டுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்புக்கு பாராட்டு: இந்தியா இதற்காக எடுத்து வரும் சீர்த்திருத்தங்களை கவனிக்க வேண்டும் என கூறியுள்ள அவர், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா நல்ல நிலையில் உள்ளது என நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவில் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது என கூறினார்.
இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு உலகிற்கே முன் உதாரணமாக இருக்கிறது என பாராட்டு தெரிவித்த அவர், வரக்கூடிய ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியாவின் கை ஓங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications