இந்திய அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் அங்குள்ள பெரு நிறுவனங்களை ஏமாற்றி 8,300 கோடி ரூபாயை ஊழல் செய்து , தற்போது அதற்காக ஏழரை ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார். இந்திய அமெரிக்க தொழிலதிபர் ,தொழில்நுட்ப முதலீட்டாளர் மற்றும் தொழில் முனைவோராக அறியப்படுபவர் ரிஷி ஷா.
கடந்த 2005 ஆம் ஆண்டு நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தில் படித்து கொண்டிருந்த போது இவருக்கு ஒரு ஐடியா தோன்றியது. அதன் அடிப்படையில் 2006ஆம் ஆண்டில் அவுட்கம் ஹெல்த் என்று நிறுவனத்தை தொடங்கினார். இது நோயாளிகளை இலக்காகக் கொண்டு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் அறைகளில் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதற்கான நிறுவனமாக செயல்பட்டது.

பெருவாரியான மருத்துவ நிறுவனங்களிடம் கலந்துரையாடி இந்த நிறுவனம் பல்வேறு மருத்துவமனைகளில் விளம்பரம் செய்து மிகப் பெரிய நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. இதனிடையே 2017 ஆம் ஆண்டு வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிறுவனம் இந்த விளம்பர நிறுவனத்தின் மோசடி நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியது.
இதன் அடிப்படையில் கோல்ட்மேன் சச்ஸ் என்ற தரகு நிறுவனம் மற்றும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் மீது மோசடி வழக்கினை தொடர்ந்தனர். அதாவதுஇந்த நிறுவனம் 4,072 கோடி ரூபாயை நிதி திரட்டல் மூலம் பெற்றுள்ளது.

இந்த நிதி மூலம் நிறுவனம் வளர்ச்சி அடைந்து லாபம் பெற்று அதன் மூலம் 1879 கோடி ரூபாய் ஈவுத்தொகையாக கிடைத்துள்ளது. ஆனால் இதனை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் ரிஷி ஷா மற்றும் நிறுவன மூத்த அதிகாரியான ஷரத்தா அகர்வால் ஆகியோரே வைத்துக் கொண்டுள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம் 12க்கும் மேற்பட்ட மோசடி மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளில் ரிஷி ஷா மற்றும் ஷரத்தா அகர்வாலின் பெயரை சேர்த்தது.
மோசடி நிரூபணம் ஆனதை அடுத்து ஷரத்தா அகர்வாலுக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது, முக்கிய குற்றவாளியான ரிஷி ஷாவுக்கு ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

நிறுவன இணை நிறுவனரான பிராட் பர்டியும் இந்த வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு 2 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ளார். இந்த மோசடி வழக்கினை விசாரித்த அமெரிக்க நீதிபதியான தாமஸ் டார்கிங் அமெரிக்க வரலாற்றிலேயே இது மிக மோசமான கார்ப்பரேட் ஃபிராடு என கூறினார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications