உலகம் தற்போது இரண்டு மோதல்களை எதிர்கொண்டிருக்கிறது. ஒருபுறம் ஈரான் -அமெரிக்கா, இஸ்ரேல் போர். மறுபுறம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போர். இப்படி இரண்டு போர்கள் உலகை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றன. இதற்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் தன்னுடைய டிரோனை அனுப்பி இருப்பது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூன்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு இன்று காலை ஒரு டிரோன் பறந்து இருக்கிறது. இது பாகிஸ்தான் நாட்டு டிரோன் என்பதை உறுதி செய்த ராணுவ வீரர்கள் அதனை சுட்டு வீழ்த்துவதற்காக 12 முறைக்கும் மேல் முயற்சி செய்திருக்கின்றனர். இந்த நிலையில் அந்த டிரோன் உடனடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு திரும்ப சென்று விட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

திக்வார் என்ற பகுதியில் சிறிது நேரம் இந்த டிரோன் பறந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த டிரோன் எதற்காக இந்திய எல்லையில் வந்து பறந்தது , உளவு பார்ப்பதற்காகவா அல்லது ஏதேனும் ஆயுதங்கள், போதை மருந்து உள்ளிட்டவற்றை இந்திய எல்லையில் டெலிவரி செய்வதற்காக வந்ததா என்பது குறித்து தற்போது ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக இதுபோல பாகிஸ்தான் நாட்டு டிரோன் இந்திய எல்லைக்குள் நுழைந்து இருக்கிறது. இரு தினங்களுக்கு முன்னரும் இதே போல பாகிஸ்தான் டிரோன் இந்திய எல்லைக்குள் நுழைந்ததை அறிந்து ராணுவ வீரர்கள் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால் அதற்குள் டிரோன் தப்பி சென்றுவிட்டதாம். இந்நிலையில் இன்றும் காலை 6 .10 மணியளவில் இஅதே போல டிரோன் இந்திய எல்லைக்குள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
துப்பாக்கி சூடு நடத்தப்படுவது தெரிந்த உடனேயே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்த டிரோன் மீண்டும் சென்று விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது வரை நடைபெற்ற சோதனையில் எங்கும் ஆயுதங்களோ போதை மருந்துகளோ வீசப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் கடந்து சில நாட்களாகவே பரஸ்பரம் தாக்கி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் டிரோன் இந்தியாவில் நுழைந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications