கடந்த மே 10ஆம் தேதி அன்று பாகிஸ்தானின் விமான தளங்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான 20 சதவீத சொத்துக்கள் அழிந்து போனதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நியூஸ் 18 தளம் இது தொடர்பாக செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயர் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக மே 10ஆம் தேதி அன்று இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு சொந்தமான 11 விமானப்படை தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான 20 சதவீத சொத்துக்கள் அழிக்கப்பட்டதாகவும் ஒரு தலைவர் உட்பட 50 பேர் கொல்லப்பட்டதாகவும் நியூஸ் 18 தளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. பாகிஸ்தானின் f16 உள்ளிட்ட போர் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் சர்கோடரி உள்ளிட்ட முக்கியமான விமான தளங்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
அங்கே வைக்கப்பட்டு இருந்த வெடிப்பொருள் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் விமான படையின் 20 சதவீத உள்கட்டமைப்பு சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல போலாரி விமானப்படைத்தளத்தின் ஸ்வாட்ரான் தலைவர் உஸ்மான் யூசுப் மற்றும் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.
மே 9 மற்றும் மே 10 ஆகிய தேதிகளில் உலகிலேயே முதன்முறையாக இந்தியா அணு ஆயுத பலம் கொண்ட ஒரு நாட்டின் விமானப்படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு ஆபரேஷன் மூலம் பாகிஸ்தானின் 11 விமான தளங்களை இந்தியா தாக்கியது என தகவல்கள் தெரிவிப்பதாக நியூஸ் 18 செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போலாரி விமானப்படை தளத்தில் தான் அதிகபட்ச சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தான் விமான படைக்கு சம்பந்தமான பல்வேறு முக்கிய போர் விமானங்களும் இந்த தாக்குதல்களில் சேதமடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. முன்னதாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூர் மூலம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார். கடந்த மே 10ஆம் தேதி 3 மணி நேரங்களுக்குள் இந்தியா பாகிஸ்தானுக்கு சொந்தமான நூர்கான், ரஃபிக், முரித், சுக்குர், சைல்கோட், பஸ்ரர், சுனைன், சர்கோதா, போலாரி, ஜாகோபபாத் உள்ளிட்ட 11 விமானப்படை தளங்களை தாக்கியது.


Click it and Unblock the Notifications