சென்னை: பொறியியல் படிப்பை முடித்து ஐடி துறையில் வேலை வாய்ப்பு கிடைத்தாலே லைஃப் செட்டிலாகி விடும் என்பதுதான் பெரும்பாலான இந்தியர்களின் மனநிலை. ஆனால் அது உண்மை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையிலான தரவு ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படிப்பை முடிக்க ரூ.20 லட்சம்: பொறியியல் படிப்பு என்றாலே இந்தியர்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. பெற்றோர் எத்தனை லட்சங்களை வேண்டுமானாலும் செலவு செய்து பிள்ளைகளை பிடெக், இன்ஜினியரிங் படிக்க வைத்து விடுவார்கள். இந்தியாவில் பிடெக் படிப்பை படிக்க வேண்டும் என்றால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு மாணவருக்கு சராசரியாக 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. இப்படி 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ் ,இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்டவற்றில் பணிக்கு சேரக்கூடிய நபர்கள் பிளம்பர், எலக்ட்ரீஷியன் மற்றும் சலூன் வேலை செய்யும் நபர்களை விட குறைவாகவே சம்பாதிக்கின்றனர் என career 360 என்ற இணையதளம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பிடுகிறது.

சம்பளம் ஒப்பீடு: அண்மையில் கேம்பஸ் இன்டர்வியூ வாயிலாக பெரிய ஐடி நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட பட்டதாரிகள் , அவர்களின் சம்பளம் ஆகியவற்றையும் அர்பன் கம்பெனி போன்ற செயலிகள் வாயிலாக எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பிங் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு என்பதையும் ஒப்பிட்டு இந்த இணையதளம் ஒரு தரவினை வெளியிட்டு இருக்கிறது.
ஒரு மணி நேரத்திற்கு ரூ.156 சம்பளம்: டிசிஎஸ் நிறுவனம் அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியராக பணியில் சேர்பவருக்கு ஒரு மாதத்திற்கு 28,000 ரூபாய் சம்பளம் வழங்குகிறது. ஒரு ஆண்டிற்கு இது 3.36 லட்சம் ரூபாய் ஆகும். இதன் படி பார்த்தால் இந்த நபர் ஒரு மணி நேரத்திற்கு 156 ரூபாயை சம்பளமாக பெறுகிறார். இன்போசிஸ் நிறுவனத்தில் சிஸ்டம் இன்ஜினியர் டிரெய்னி பணிக்கு 30,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 3.60 லட்சம் ரூபாயாக இது இருக்கிறது ஒரு மணி நேரத்திற்கு 167 ரூபாய் சம்பளமாக கிடைக்கிறது.
நுழைவு நிலை வேலைகளில் சம்பளம் குறைவு: காக்னிசண்ட் நிறுவனத்தில் புரோகிராமர் அனலிஸ்ட் டிரெய்னி பணியில் இருப்பவருக்கு 33,499 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது , ஆண்டு சம்பளம் என பார்த்தால் இது 4 லட்சம் ரூபாய். ஒரு மணி நேரத்திற்கு இவர்களுக்கு 186 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. விப்ரோ நிறுவனத்தில் ஜூனியர் மெம்பராக வேலைக்கு சேர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆண்டு சம்பளம் எனில் 3 லட்சம் ரூபாய் ஒரு மணி நேரத்துக்கு இவர்களுக்கு 139 ரூபாய் சம்பளமாக கிடைக்கும் .

பிடெக் படித்தும் இவ்வளவு தான் சம்பளமா?: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் வேலை இருக்கிறது, அதில் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என வைத்துக்கொண்டால் , பிடெக் படித்த ஒருவர் நுழைவு நிலை வேலைகளில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 139 ரூபாயிலிருந்து 156 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதுவே அர்பன் கம்பெனி தளத்தில் பிளம்பிங் வேலைகள், எலக்ட்ரீசியன், வீட்டினை தூய்மைப்படுத்தும் வேலை, மசாஜ் மற்றும் ஸ்பா சேவைகள், கார்பென்டர் போன்ற பல சேவைகளுக்கு நமக்கு ஆட்கள் கிடைக்கின்றனர்.
எலக்ட்ரீசியனுக்கு அதிக சம்பளம்: அண்மையில் ஐபிஓ வெளியீட்டிற்காக அர்பன் கம்பெனி தங்கள் நிறுவன நிதி விவரங்களை வெளியிட்டது. அதில் சராசரியாக தங்களுடன் இணைந்து வேலை செய்யக்கூடிய எலக்ட்ரீசியன், பிளெம்பர், பியூட்டிசியன் உள்ளிட்ட தொழில் நிபுணர்கள் ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வருமானமாக ஈட்டுகிறார்கள் இதில் 27 சதவீதம் அர்பன் கம்பெனிக்கு சென்று விடுகிறது, மற்ற செலவுகள் போக இவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 314 ரூபாய் சம்பளமாக கிடைக்கிறது.
ஸ்விக்கி டெலிவரி வேலைக்கு அதிக சம்பளம்: அர்பன் கம்பெனி தளத்தில் இவ்வகை தொழில் நிபுணர்கள் மாதத்திற்கு 87 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்ற கணக்கில் இவர்களின் சம்பளம் பிடெக் பட்டதாரிகளின் ஐடி வேலையில் கிடைக்கும் சம்பளத்தை விட அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் ஸ்விக்கி, ஸோமேட்டோ, ஓலா, ஊபர் ஆகிய தளங்களும் கிக் வேலைகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கியுள்ளன. இந்த வேலைகளில் இருப்பவர்களும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 300இல் இருந்து 360 ரூபாய் வரை வருமானமாக பெறுகிறார்களாம்.
ஏமாற்றும் ஐடி நிறுவனங்கள்: இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்களின் வருமானமும், கடந்த 15 ஆண்டுகளில் பல மடங்கு வளர்ந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் லாபமே கடந்த 15 ஆண்டுகளில் 3,000 கோடி ரூபாயில் இருந்து 34,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் இந்நிறுவனம் நுழைவு நிலை ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை 15 ஆண்டுகளாக மாற்றாமலேயே இருக்கிறது. மற்ற ஐடி நிறுவனங்களும் இதனையே பின்பற்றுகின்றன.


Click it and Unblock the Notifications