உலக நாடுகளின் ரெசிஷன் அச்சம் அதிகமாக இருந்தாலும், இந்தியாவில் வளர்ச்சி வாய்ப்புகள் முன்னணி பொருளாதார நாடுகளைக் காட்டிலும் மிகவும் சிறப்பாகவே இருக்கிறது.
ஆனால் வெளிநாட்டுச் சந்தை சூழ்நிலைகளாலும், மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வாலும் இந்திய ரூபாய் மதிப்பு, பணவீக்கம், நிதி நிதிநிலை, அன்னிய செலாவணி இருப்பு ஆகியவை பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய வங்கிகளில் முக்கியமான பிரச்சனை உருவாகியுள்ளது.
இந்திய வர்த்தகச் சந்தை
இந்திய வர்த்தகச் சந்தை பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலேயே உள்ளது, இதன் காரணமாக வர்த்தகச் சந்தையில் கடனுக்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக உள்ளது. இது வங்கிகளுக்கு டக்கரான வாய்ப்பாக இருந்தாலும் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.
டெபாசிட் - கடன்
இந்திய வங்கிகளில் டெபாசிட் ஆகப் பெறும் பணத்தைக் காட்டிலும் அதிகப்படியான கடன் கொடுக்கப்படுவதால் இந்திய வங்கிகளில் பணப்புழக்க தட்டுப்பாடு உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகச் சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்கச் சந்தையில் கூடுதலாக இருக்கும் பணப்புழக்கத்தைக் குறைக்க வட்டி விகிதத்தை உயர்த்தி வரும் நிலையில் தற்போது கடனுக்கான தேவை அதிகரித்துள்ளதால் வங்கிகளின் கஜானாவில் பணப்புழக்கம் நெருக்கடி உருவாகியுள்ளது.
பணப்புழக்கம் நெருக்கடி
இந்தப் பணப்புழக்கம் நெருக்கடிக்கும் மக்களின் வைப்பு நிதிக்கும் எவ்விதான ஆபத்தும், பாதிப்பும் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். கடந்த ஓரிரு ஆண்டுகளில் வங்கிகள் தங்களுடைய ரொக்க கையிருப்பு மற்றும் குறுகிய காலப் பணத்தின் அளவு குறைந்து வருகிறது.
ரெப்போ விகித கடன்கள்
வங்கிகள் இந்தப் பணத்தில் குறிப்பிட்ட பகுதியை தங்கள் சொத்து வளர்ச்சிக்குப் பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் வங்கிகள் டெப்பாசிட் மற்றும் புதிய நிதியைத் திரட்டும் பணிகளைத் துவங்கியுள்ளது. குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் ஆர்பிஐ-யிடம் இருந்து வாங்கும் ரெப்போ விகித கடன்களை அதிகப்படுத்திச் சந்தையில் இருக்கும் டிமாண்ட்-ஐ ஈடு செய்கிறது.
கடன் வளர்ச்சி
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் அக்டோபர் 21 ஆம் தேதி நிலவரப்படி கடந்த ஒரு வருடத்தில் வங்கிகளின் கடன் அளவு 17.9 சதவீதம் அதிகரித்து 128.9 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 9 வருடத்தில் இதுதான் அதிகப்படியான வருடாந்திர வளர்ச்சி அளவாக உள்ளது.
டெபாசிட் வளர்ச்சி
இதேவேளையில் வங்கிகளின் டெபாசிட் தொகை அளவு வெறும் 9.5 சதவீதம் மட்டுமே உயர்ந்து 172 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவில் கடனுக்களுக்கான தேவை அதிகரிக்க மிக முக்கியமான காரணம் ரீடைல் கடன் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்தின் வொர்கிங் கேப்பிடல்-க்கான தேவை அதிகரித்துள்ளது தான் என careedge தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனியார் வங்கிகள் லாபம்
இந்தச் செப்டம்பர் காலாண்டில் தனியார் வங்கிகள் இணைந்து 33,165 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே செப்டம்பர் காலாண்டின் ரூ.19,868 கோடியை ஒப்பிடுகையில் சுமார் 67 சதவீதம் அதிகமாகும்.
பொதுத்துறை வங்கிகள் லாபம்
இதேபோல் பொதுத்துறை வங்கிகள் கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 17,123 கோடி ரூபாயை லாபமாகப் பெற்ற நிலையில் 50 சதவீத வளர்ச்சியில் 25,685 கோடி ரூபாயை லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இதில் 50 சதவீதத்திற்கு மேலான தொகையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications