இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் அடுத்த சில மாதங்களுக்கு புதிய வைப்பு நிதிக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்க வாய்ப்பில்லை. இதற்கு முக்கிய காரணம், கடன் வளர்ச்சி குறைந்து வருவதும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் பணப்புழக்க விகிதத்தை (CRR) குறைத்ததும் தான்.
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் நடத்திய இரு மாத நாணய கொள்கை குழு (MPC) நாணயபுழக்க விகிதத்தை (CRR) 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து 4% ஆக குறைக்கும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது. ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தனது பதவிக் காலத்தின் இறுதி உரையில் இந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.

சிஆர்ஆர் விகிதத்தை 4.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டதன் மூலம் வங்கித்துறையில் 1.16 லட்சம் கோடி ரூபாய் நிதி உட்செலுத்தப்படும். இதன் மூலம் வங்கிகளுக்கு போதுமான நிதி ஆதாரம் கிடைத்துள்ளது, இதனால் அதிக வட்டி வருமானம் கொடுத்து புதிய வைப்பு நிதியை திரட்டுவதற்கான அவசியம் இல்லை.
மேலும், இந்தியாவில் மக்கள் மத்தியில் ரீடைல் கடன் வளர்ச்சியின் வேகம் குறைந்து வருவதால், கடன் மற்றும் வைப்புத்தொகை வளர்ச்சி இடையே உள்ள இடைவெளி குறுகியுள்ளது. இந்த போக்கு வங்கிகள் புதிய வைப்புத்தொகைகளை ஈர்ப்பதற்காக அதிக வட்டி விகிதங்களை வழங்க வேண்டியதில்லை.
இதனால் அடுத்த சில மாதங்களுக்கு வங்கிகளில் வைப்பு நிதி வருவது குறையும், இதனால் RBI ரெப்போ விகிதத்தை குறைக்கும் வரை எந்த குறிப்பிடத்தக்க வட்டி உயர்வு நடக்காது. இதேபோல் தற்போது வைப்பு நிதி செய்துள்ள திட்டங்களுக்கு எவ்விதமான மாற்றமும் இருக்காது, தொடர்ந்து நிலையாக இருக்கும்.
இருப்பினும், சில வங்கிகள் தனிப்பட்ட வகையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தங்கள் பணப்புழக்க நிலையை நிர்வகிக்கவும் குறிப்பிட்ட வைப்புத்தொகை திட்டத்தில் வட்டி விகிதங்களை உயர்த்தி வழங்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இது அரிதாக நடக்க கூடியது.
எனவே வங்கி வைப்பு நிதியை முக்கிய ஆதாரமாக பார்க்கக்கூடிய அனைத்து முதலீட்டாளர்களுக்கும், திட்டமிட்டு தங்களுடைய முதலீட்டை மாற்று இடத்தில் செய்வது சிறந்தது. வங்கி வைப்பு நிதி மிகவும் பாதுகாப்பான திட்டமாக கருதப்பட்டாலும், இத்திட்டத்தில் மிகவும் குறைவான வருமானம் மட்டுமே கிடைப்பதை கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications