மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான ராணுவ மோதல் தீவிரமடைந்ததால் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) விமான சேவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆயிரகணக்கான வெளிநாட்டு பயணிகள் தவித்து வருகின்றனர்.
பெரும்பாலான வெளிநாட்டு மக்களுக்கு தங்க இடம் கிடைத்தாலும், பல ஹோட்டல் பார்கிங் ஏரியாவிலும், மற்ற பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். துபாய் மற்றும் அபுதாபி-யில் பல இந்திய பிரபலங்கள் சிக்கியுள்ளனர்.

அமைச்சர்
தெலங்கானா விவசாய அமைச்சர் தும்மலா நாகேஸ்வர ராவ், உறவினர் ஒருவரின் சிகிச்சைக்காக ஐந்து நாட்களுக்கு முன் துபாய் சென்றிருந்தார். விமான சேவை நிறுத்தப்பட்டதால் அவர் தற்போது அங்கேயே தங்கியுள்ளார்.
அஜித் குமார்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், ரேசருமான நடிகர் அஜித் குமார், கார் பந்தய பயிற்சி மற்றும் சர்வதேச போட்டிக்கான தயாரிப்புக்காக அபுதாபியில் இருந்தார். விமான சேவை முடங்கியதால் சென்னை திரும்புவது தாமதமாகியுள்ளது. அவரது குழு, அவர் பாதுகாப்பாக உள்ளதாகவும், விமான சேவை தொடங்கியதும் திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது.
பி.வி.சிந்து
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, 'ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்' போட்டிக்காக பிரிட்டன் செல்லும் வழியில் துபாய் விமான நிலையத்தில் சிக்கியுள்ளார். இந்தியா திரும்புவது குறித்து இதுவரை எந்த தெளிவான தகவலும் இல்லை.
ஈஷா குப்தா
பாலிவுட் நடிகை ஈஷா குப்தா சமூக வலைதளத்தில் பதிவிட்டு, தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், UAE அதிகாரிகள் உணவு, தங்குமிடம், விமான நிலைய போக்குவரத்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.
நர்கிஸ் ஃபக்ரி
பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி துபாயில் சிக்கியுள்ளதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் தெரிவித்துள்ளார். அவர், பயண சூழல் காரணமாக தூக்கமின்றி இருப்பதாகவும், பதற்றத்தில் உள்ளதாகவும் பகிர்ந்துள்ளார். அதேபோல, பாலிவுட் நடிகை சோனல் சவுகான், வங்காள நடிகை சுபஸ்ரீ கங்குலி உள்ளிட்டோரும் துபாயில் தவித்து வருகின்றனர்.
இந்த நிலைமை உலக நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விமான சேவை மீண்டும் தொடங்கும் வரை பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்திய பயணிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. மத்திய கிழக்கு சூழ்நிலை தெளிவாகும் வரை பயண திட்டங்களை தள்ளிவைப்பது நல்லது. உலக நாடுகள் இந்த பதற்றத்தை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications