டெல்லி, மும்பை போன்ற முக்கிய இந்திய நகரங்களில் ரியல் எஸ்டேட் சொத்து விலை தாறுமாறாக அதிகரித்து வருவதால், 2வது மற்றும் 3வது நிலை நகரங்களைச் சேர்ந்த ஏராளமான முதலீட்டாளர்கள் தற்போது நாட்டின் முக்கிய மெட்ரோ நகரங்களில் வீடுகளை வாங்காமல் துபாயில் சொந்த வீட்டை வாங்கி வருகிறார்கள்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வரும் சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வில்லாக்கள் அனைத்தும் 5 கோடி ரூபாய்க்கு மேல் விலை கொண்டதாக இருக்கும் வேளையில், துபாயில் சராசரி விலையே 5 கோடி ரூபாயாக இருக்கும் காரணத்தாலும், துபாயில் அதிகப்படியான வாடகை வருமானம் கிடைக்கும் காரணத்தாலும் பல பணக்காரர்கள் துபாய் நகரத்தை மாற்று முதலீட்டுத் தளமாகக் கருதுகின்றனர்.

பொதுவாக இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் முக்கிய நகரங்களில் சொத்துக்களை வாங்குவது வழக்கம். இதன் அடிப்படையில் தான் கடந்த 5 வருடத்தில் பங்குச்சந்தையில் பெரும் பணம் சம்பாதித்த பல பெரும் தலைகள் மும்பை, டெல்லி, சென்னை என ஆடம்பர வீடுகளை வாங்கி குவித்து வந்தனர்.
இதன் வாயிலாக தற்போது பெரு நகரங்களில் அறிமுகம் செய்யப்படும் பெரும்பாலான திட்டங்கள் அனைத்தும் ஆடம்பர வீடுகளாகவே உள்ளது. இப்படியிருக்கையில் சந்தையில் டிமாண்ட் அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது. இதுதான் தற்போது முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.
வலுவான பொருளாதாரம், உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் முதலீட்டாளர் நட்பு கொள்கைகள் கொண்ட துபாய் நகரத்தில், இந்திய முதலீட்டாளர்களுக்கு மிகவும் உகந்த முதலீட்டு இலக்காக உருவெடுத்துள்ளது.
துபாயில் சொத்து விலைகள் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் (ப்ரீமியம் அல்லது ஆடம்பர ரியல் எஸ்டேட்) ஒரே மாதிரியாக இருந்தாலும், வரிவிதிப்பு குறைவான சூழல், விசா பெறும் நன்மை போன்ற பல நன்மைகளைத் துபாய் வழங்குகிறது. இதனால் மும்பை, டெல்லியை காட்டிலும் துபாயில் சொத்துக்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தியா சோதேபிஸ் இன்டர்நேஷனல் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர் ஆகாஷ் பூரி கூறுகையில், என்சிஆர் மற்றும் மும்பையில் சொத்து விலை உயர்வு பல முதலீட்டாளர்களை துபாய் நோக்கி திரும்ப வைத்துள்ளதாகக் கூறுகிறார்.
ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனத்தின் தரவுகளின் படி துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில் வலுவான வளர்ச்சியை உள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டில், இந்நகரத்தில் சுமார் 1,20,000 வீடுகள், நிலங்கள் விற்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு AED 259 பில்லியினை தாண்டியதுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இது பரிவர்த்தனை எண்ணிக்கையில் 43% மற்றும் விற்பனை மதிப்பில் 34% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதேவேளையில் துபாயில் தற்போது எந்த புதிய ரியல் எஸ்டேட் திட்டம் துவங்கப்பட்டாலும் அதில் வீடு வாங்குவோரில் 50 சதவீதத்தினர் இந்தியர்களாக உள்ளனர் என்பது கவனிக்க கூடிய விஷயமாக உள்ளது. இதைவிட முக்கியமாக துபாயில் வாடகை வருமானம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக கிடைக்கிறது, ஆனால் இந்தியாவில் 4-7 சதவீதமாக உள்ளது.


Click it and Unblock the Notifications