2025-ஆம் ஆண்டில்.. இந்தியாவில் ஊதிய உயர்வு மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஆகியவை இருக்கும் என மெர்சர் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. திறமையான தொழிலாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் திறமையான ஊழியர்களுக்கான ஊதியம் 9.4 சதவீதம் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் 37 சதவீத நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க திட்டமிட்டு வருவதாகவும் மெர்சர் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட மெர்சர், 1550-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து கருத்துக்களை பெற்றுள்ளது. இதன் மூலம் தான், இந்த ஆண்டு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டதும் கண்டறியப்பட்டது. மெர்சர் வெளியிட்ட கணக்கெடுப்பின்படி கடந்த 5 ஆண்டுகளில் சம்பள உயர்வுகள் சீராக இருந்ததையும் தெரிந்து கொள்ள முடிகிறது. 2020-ஆம் ஆண்டில் 8 சதவீதமாக இருந்த ஊதிய உயர்வு.. 2025-ஆம் ஆண்டில் 9.4 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வுக்கு ஆட்டோமேட்டிவ் துறை பெரும் பங்களிக்கவுள்ளது. இந்த ஆண்டு ஆட்டோமேட்டிவ் துறையில் 10 சதவீத ஊதிய உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து உற்பத்தி மற்றும் பொறியியல் பிரிவுகளில் 8 சதவீதத்திலிருந்து 9.7 சதவீதம் வரை ஊதிய உயர்வு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2025-ஆம் ஆண்டில் 37 சதவீத நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா முயற்சி பல்வேறு துறைகளுக்கும் மிகப்பெரிய உத்வேகத்தை வழங்கியுள்ளது. இந்தியாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்ற இந்த கணக்கெடுப்பில், திறமையான தொழிலாளர்களுக்கான வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் வருகை ஆகியவற்றை பற்றிய முக்கிய தகவல்களும் வெளியானது. அதோடு சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா பெருவாரியாக டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்பட்டதும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு அறிக்கைகளில் 2025 ஆம் ஆண்டு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதோடு தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கையிலும் இதே போன்ற தகவல் வந்துள்ளது. சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனம் 2025-ஆம் நிதியாண்டில் 40,000 ஆயிரம் பணியாளர்களை ட்ரைனி ரோல்களுக்கு பணியமர்த்த இருப்பதாக தெரிவித்தது. இந்த ஆண்டு வேலை சந்தையில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பு நிலவு வருகிறது. இது போன்ற விஷயங்கள் எந்த அளவுக்கு வேலை தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications