உலகிலேயே அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. எனவே இந்தியாவின் கச்சா எண்ணெய் வாங்கும் போக்கு உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிய இந்திய நிறுவனங்கள் அதனை கைவிடுத்து தற்போது அமெரிக்க நிறுவனங்களிடம் எண்ணெய் வாங்க தொடங்கியுள்ளன.
ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை வலுப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துவிட்டு அமெரிக்க நிறுவனங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்துள்ளன.

அடுத்த மாதம் அமெரிக்காவிலிருந்து ஒரு நாளைக்கு 2.50 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வர உள்ளன என ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து இவ்வளவு கச்சா எண்ணையை இந்தியா வாங்குவது இதுவே முதல் முறை. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதனால் ரஷ்யாவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் எண்ணெய் விற்பனை செய்தன. இதனை பயன்படுத்திக் கொண்ட இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி பயன்படுத்தி வந்தன.
அண்மையில் அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான பொருளாதார தடையை அதிகப்படுத்தியது. குறிப்பாக ரஷ்ய அரசுக்கு சொந்தமான சோவ்காம்ப்ளோட் நிறுவனத்தின் மீதான பொருளாதார தடைகளை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் இந்திய நிறுவனங்கள் அவற்றிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளன.
அதுமட்டுமின்றி 14 கச்சா எண்ணெய் டேங்கர்கள் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் இந்த கப்பல்கள் கச்சா எண்ணெயை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில்லை என முடிவெடுத்துள்ளது. அதேபோல சோ காம்ப்ளாட் கப்பல்களில் வரக்கூடிய ரஷ்யா எண்ணெயை வாங்குவதில்லை என பல்வேறு இந்திய நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
இதற்கிடையே இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து கொள்ள அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது. மூன்று பெரிய எண்ணெய் கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுவதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது. இவை இந்தியாவின் மேற்கு கரை பகுதிக்கு குறிப்பாக ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்காக கொண்டுவரப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications