அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் வேளையில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தியாவில் தற்போது பணவீக்கம் குறைந்து, தென்மேற்கு பருவமழை நல்ல நிலையில் இருப்பது போன்றவை பொருளாதார வளர்ச்சிக்கான சாதகமான அறிகுறிகளாக உள்ளது. இதற்கிடையே மற்றொரு நம்பிக்கையூட்டும் தகவல் வெளியாகியுள்ளது, அதுதான் உள்ளாடை விற்பனை.
ஜட்டி விற்பனைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம், ஆனால் இதில் பெரிய விஷயமே ஜட்டிக்குள் உள்ளது. முன்னாள் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தலைவர் அலன் கிரீன்ஸ்பான் ஆண்கள் உள்ளாடை குறியீடு என்பதை உருவாக்கினார், இந்த குறியீடு கடினமான பொருளாதார நேரத்தில் மீட்சி அடைவதை கண்டுபிடிக்கும் ஒரு கருவியாக அமைகிறது.

அதாவது மக்கள் கையில் பணம் இறுக்கமாக இருக்கும் போது, குறிப்பாக ஆண்கள், உள்ளாடை போன்ற அத்தியாவசிய உடைகளை வாங்குவதைத் தள்ளி வைக்க முனைகிறார்கள், இத்தகைய சூழ்நிலையில் ஆண்கள் உள்ளாடை குறியீடு எப்போது உயர்கிறதோ அப்போது மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரித்து மக்களின் பர்சேஸ் பவர் அதிகரித்துள்ளது என்பது பொருள்.
ஆண்கள் உள்ளாடை குறியீடு என்பது உழைக்கும் பல தசாப்தங்களுக்கு முன்பு உருவானது, அப்போது ஆண்கள் தான் அதிகப்படியான வேலைவாய்ப்பு துறையில் பங்கு விகித்தனர். ஆனால் இன்றைய நிலை பெண்களும் வேலைவாய்ப்பு துறையில் அதிகப்படியான பங்கீடு வகிக்கும் நிலையில் இக்குறியீட்டின் கணக்கீட்டு முறையை மாற்றியமைக்க வேண்டும்.
இந்த நிலையில் உள்ளாடை தயாரிப்பிலும், விற்பனையிலும் இந்தியாவில் முன்னோடியாக இருக்கும் ஜாக்கி பிராண்டின் பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ஆதித்யா பர்லா ஃபேஷன் அண்ட் ரீடைல், அரவிந்த் ஃபேஷன்ஸ் மற்றும் ரூபா அண்ட் கோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மூலம் உள்ளாடை குறியீடு போக்கை கணக்கிட முடியும்.
பேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம், ஜூன் காலாண்டில் விற்பனை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் புதிய தயாரிப்புகளைச் சந்தையில் அறிமுகம் செய்வதற்கான வர்த்தக சூழ்நிலையும் உருவாக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளது.
அரவிந்த் ஃபேஷன்ஸ் நிறுவனத்திற்கு, உள்ளாடை பிரிவு இரட்டை இலக்கத்தில் வளர்ந்து வருகிறது, இது நிறுவனத்தின் மொத்த விற்பனையை விட வேகமாக வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது. ரூபா ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வருவாய் 8% அதிகரித்ததாகவும், உள்ளாடை பிரிவில் வளர்ச்சி 9% ஆகவும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
விஐபி மற்றும் பிரெஞ்சி போன்ற பிராண்டுகளை விற்பனை செய்யும் விஐபி கிளாத்திங், செப்டம்பர் காலாண்டில் வருவாய் 15-20% வளரும் கணித்துள்ளது. ஆதித்யா பர்லா ஃபேஷன் அண்ட் ரீடைல் நிர்வாகம், கடந்த காலாண்டில் உள்ளாடை வணிகம் வளர்ச்சி கண்டாலும், தொடர்ந்து சுருங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications