இன்று மத்திய அரசு, இந்திய பொருளாதாரத்தின் ஜூன் 2020 காலாண்டு ஜிடிபி தரவுகளை வெளியிட இருக்கிறது. இந்திய பொருளாதாரம் இதுவரை வரலாறு காணாத வகையில் ஒரு சரிவைக் காணலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஏற்கனவே, இந்திய பொருளாதாரத்தில், நுகர்வோர் டிமாண்ட் மற்றும் புதிய முதலீடுகள் தொடர்ந்து சரிந்து கொண்டு இருந்த நேரத்தில் தான், கொரோனா வைரஸ் லாக் டவுன்கள் வேறு சேர்ந்து கொண்டு, மேலும் டிமாண்டையும், முதலீடுகளையும் குறைத்து இருக்கிறது.
ராய்டர்ஸ் நிறுவனம், பொருளாதார வல்லுநர்களிடம் நடத்திய சர்வேயில், இந்தியா, இந்த ஜூன் 2020 காலாண்டில் 18.3 % சரிவைக் காணலாம் எனக் கணித்து இருக்கிறார்கள். முந்தைய மார்ச் 2020 காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.1 % மட்டுமே வளர்ச்சி காட்டியதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
இதே பொருளாதார வல்லுநர்கள், செப்டம்பர் 2020 காலாண்டில், இந்திய பொருளாதாரம் 8.1 % சரிவைக் காணலாம் என்றும், டிசம்பர் 2020 காலாண்டில் 1.0 % சரிவைக் காணலாம் என்றும் கணித்து இருக்கிறார்கள். இந்த கணிப்புகள், இந்த 2020-ம் ஆண்டில், இந்தியப் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கும் வருவதற்கான ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது.
தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் எண்ணிக்கை, அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் அமெரிக்காவும், 2-வது இடத்தில் பிரேசிலும் இருக்கிறது.
போக்குவரத்து, கல்வி மையங்கள், உணவகனங்கள் போன்ற துறைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. சில மாநிலங்களில் வாராந்திர லாக் டவுன்களும் இருக்கின்றன. இவைகள் எல்லாமே, இந்தியாவின் உற்பத்தி, சேவை, சில்லறை விற்பனை போன்றவைகளை பாதித்து இருக்கின்றன. அதோடு லட்சக் கணக்கான மக்கள் வேலையில் இல்லாமல் தவிக்கிறார்கள்.
ஆசிய நாடுகளிலேயே, இந்திய பொருளாதாராம் தான் கொரோனா லாக் டவுனால் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக, கேப்பிட்டல் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர் ஷிலன் ஷா (Shilan Shah) சொல்லி இருக்கிறார். இந்த ஜூன் 2020 காலாண்டில் இந்திய பொருளாதாரம் 15 % சரிவைக் காணலாம் எனக் கணித்து இருக்கிறார் ஷிலன்.


Click it and Unblock the Notifications