2020ல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று, லாக்டவுன் ஆகியவற்றின் மூலம் வர்த்தகச் சந்தையின் மோசமான பாதிப்பை எதிர்கொண்ட காரணத்தால் பொருளாதாரம் -9.6 சதவீதம் வரையில் சரிவை எதிர்கொண்டு இருந்தாலும், 2021ல் இந்திய பொருளாதாரம் 7.3 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என ஐ.நா தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.
ஐ.நா-வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தச் சர்வதேச பொருளாதாரப் பாதிப்பு இந்த முறை கொரோனா வைரஸ் மூலம் 2020ஆம் ஆண்டில் ஏற்பட்டு உள்ளது எனத் தனது உலகப் பொருளாதார அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதாரம்
2020ஆம் ஆண்டில் எப்போதும் இல்லாத அளவில் உலகப் பொருளாதாரம் 4.3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. 2009ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதியியல் நெருக்கடிக் காலத்தை விடவும் சுமார் இரண்டு மடங்கு அதிக வீழ்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில் 2021ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரம் 4.7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என ஐ.நா-வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய முதலீட்டுத் தளம்
கொரோனா வைரஸ் தொற்று மூலம் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் உடனடியாக விலகாது. அடுத்த சில ஆண்டுகள் இதன் பாதிப்புகள் தொடரும். இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் வளர்ச்சி அடையச் செய்யச் சரியான இடத்தில் முதலீட்டுச் செய்ய வேண்டும்.
குறிப்பாகப் பொருளாதார வளர்ச்சி, சமுகம் மேம்பாடு, பருவகால மாற்றம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் உலக நாடுகளின் பொருளாதாரம் நிலையான வேகத்தில் வளர்ச்சி அடையும்.
இந்தியாவின் நிலை
இந்நிலையில் இந்த அறிக்கையில் இந்தியப் பொருளாதாரம் 2019ல் 4.7 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில், 2020ல் கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்பால் மொத்த வர்த்தகச் சந்தையும் முடங்கியது. இதனால் 2020ல் இந்திய பொருளாதாரம் 9.6 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியா டாப்பு..
இந்நிலையில் 2021ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.3 சதவீதம் வளர்ச்சி அடைந்து உலகின் வேகமாக வளர்ச்சியைப் பதிவு செய்த நாடு என்ற பெருமையை அடையும் என ஐ.நா தெரிவித்துள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து 2வது இடத்தில் சீனா 2021ஆம் ஆண்டில் 7.2 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடையும் என ஐநா-வின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications