ஒரு நாட்டின் பொருளாதார நிலையை அறிவதற்கு உதவுகிறது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி. அந்த வகையில் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.4% வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
8.4% என ஜிடிபி வளர்ச்சி: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் , 2024 ஆம் நிதியாண்டின் டிசம்பர் மாதத்துடன் முடிந்த மூன்றாம் காலாண்டின் ஜிடிபி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன் படி நாட்டின் ஜிடிபி 8.4% வளர்ச்சி அடைந்துள்ளது.

கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறை சிறப்பாக செயல்பட்டதே இதற்கு காரணம். மூன்றாம் காலாண்டின் ஜிடிபி எதிர்பார்த்ததை விட அதிக வளர்ச்சி அடைந்துள்ளதால், முழு ஆண்டுக்குமான ஜிடிபியை ஏற்கனவே கணித்ததை விட அதிகமாகி 7.3% ஆக இருக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
4.3%இல் இருந்து 8.4% என வளர்ச்சி: கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ஜிடிபி 4.3%ஆக இருந்த நிலையில் ஓராண்டிலேயே நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. கட்டுமானத் துறையின் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதம் (10.7%), அதைத் தொடர்ந்து உற்பத்தித் துறையின் வளர்ச்சி விகிதம் (8.5 %) ஆகியவை ஜிடிபி வளர்ச்சிக்கு உதவியுள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த 6 காலாண்டுகளில் இந்த காலாண்டில் தான் அதிகபட்சமாக 8.4% என ஜிடிபி வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முன்பு 2022-23ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 13.2 % என இந்தியாவின் ஜிடிபி இருந்தது.
பிரதமர் மோடி பெருமிதம்: இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 2023-24 மூன்றாம் காலாண்டில் பதிவாகியுள்ள 8.4 % ஜிடிபி வளர்ச்சி என்பது, இந்தியப் பொருளாதாரத்தின் வலிமையையும் ,திறனையும் காட்டுகிறது. 140 கோடி இந்தியர்கள் சிறந்த வாழ்க்கை வாழவும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கவும் உதவும் என கூறியுள்ளார்.
சரிவடைந்த துறைகளை கவனிக்க வேண்டும்: வல்லுனர்களின் கணிப்பை பின்னுக்கு தள்ளி நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரித்ததற்கு முதலீடுகள் அதிகமானதே காரணம் என்றும், அரசின் வருவாய் செலவினங்கள் மற்றும் மூலதன செலவினங்களில் ஏற்பட்ட சரிவு, 2024 ஜனவரியில் முக்கிய துறைகளில் ஏற்பட்ட சரிவு ஆகியவை சில எச்சரிக்கையான போக்குகளை முன் வைக்கின்றன என ஐசிஆர்ஏ லிமிடெட் தலைமை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறியுள்ளார்.
வேளாண்மை துறை பலவீனம் அடைந்துள்ளதை கவனிக்க வேண்டும் என்றும், உற்பத்தி மற்றும் சேவை துறையின் வளர்ச்சியே ஜிடிபியின் வளர்ச்சிக்கு காரணம் என்றும் ஹெச்டிஎப்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் சாக்ஸி சிங் தெரிவித்துள்ளார்.
8 துறைகளின் வளர்ச்சி குறைந்தது: நாட்டின் ஜிடிபி வளர்ச்சி அடைந்திருந்தாலும், 8 முக்கிய உள்கட்டமைப்பு துறைகள் 15 மாதத்தில் இல்லாத அளவு குறைந்து 3.6% என உள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
உரம், ஸ்டீல், மின்சாரம் துறைகள் சரியாக செயல்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த துறைகளின் வளர்ச்சி டிச்மபரில் 4.9%ஆகவும், கடந்த 2023 ஜனவரியில் 9.7%ஆகவும் இருந்தது. அதே போல ஜனவரி இறுதியில் அரசின் நிதி பற்றாக்குறை 11 லட்சம் கோடி என உயர்ந்துள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications