டெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சியை அளவிடும் சில முக்கிய குறியீடுகளில் ஒன்று தான் இந்த ஜிடிபி.
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி, இந்த 2019 - 20 நிதி ஆண்டின், கடந்த 2 காலாண்டுகளாக அத்தனை நன்றாக இல்லை. ஜூன் 2019 காலாண்டில் ஜிடிபி 5.0 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டது.

அதற்கு அடுத்த செப்டம்பர் 2019 காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 4.5 சதவிகிதமாக மட்டுமே இருந்தது.
நாளை, பிப்ரவரி 28, 2020, வெள்ளிக்கிழமை, இந்தியாவின் டிசம்பர் 2019-க்கான (2019 - 20 நிதி ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு) ஜிடிபி தரவுகள் வெளியாக இருக்கின்றன.
இந்த டிசம்பர் 2019 காலாண்டு ஜிடிபி வளர்ச்சி கூட கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் வந்த 4.5 சதவிகித அளவுக்கே இருக்கலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டு இருக்கிறார்கள்.
என்ன அடிப்படையில் இப்படி கணக்கிட்டு இருக்கிறார்கள் என்று கேட்டால், இந்தியப் பொருளாதாரத்தின் 33 முக்கிய விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஜிடிபி கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்களாம்.
இந்த 2019 - 20 நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி 4.6 சதவிகிதமாக இருக்கலாம் என எஸ் பி ஐ வங்கியின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் செளம்ய காந்தி கோஷ் சொல்லி இருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து கோட்டக் மஹிந்திரா வங்கியின் பொருளாதார ஆலோசகர் உபாசனா பரத்வாஜ், இந்தியாவின் பொருளாதாரம் இந்த 2019 - 20 நிதி ஆண்டில் அதே 4.7 % வரை வளரலாம் எனச் சொல்லி இருக்கிறார்.
இந்த 2019 - 20 நிதி ஆண்டு முழுமைக்கும் 5 சதவிகிதமாக மட்டுமே இருக்கலாம் என பல அமைப்புகள் சொல்லி இருந்ததும் இங்கு நினைவு கூறத்தக்கது. இந்த 5 சதவிகித பொருளாதார வளர்ச்சி என்பது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த ஜிடிபி வளர்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் நம், இந்தியப் பொருளாதார சர்வேயை தயார் செய்த நம் முதன்மைப் பொருளாதார ஆலோசகர், அடுத்த 2020 - 21 நிதி ஆண்டுக்கு, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.0 - 6.5 சதவிகிதமாக இருக்கலாம் எனச் சொல்லி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications