மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 2023க்கான மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டது, இதில் 2024 ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5 சதவீத அளவிலான நாமினல் GDP வளர்ச்சி அளவீட்டை எளிதாக எட்டக்கூடும் என தெரிவித்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தேசிய வருமானத்தின் மதிப்பீடுகள் அறிக்கையில் 2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ரியல் ஜிடிபி அளவு 7.8 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டு இருந்ததையும் ஆகஸ்ட் 2023க்கான மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது.

2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மக்கள் மத்தியில் நிலவிய நுகர்வு மற்றும் முதலீட்டில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் நாட்டின் ரியல் ஜிடிபி அளவு 7.8 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதோடு இக்காலக்கட்டத்தில் அதிகரிக்கப்பட்ட கார்பரேட் நிறுவனங்களின் லாபம், தனியார் மூலதன உருவாக்கம் மற்றும் வங்கிக் கடன் வளர்ச்சி ஆகியவையும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சீராக ஏறுவது மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை பற்றாக்குறையின் தாக்கத்தால் விவசாய உற்பத்தி போன்ற பிரச்சனைகளையும் ஆகஸ்ட் மாத அறிக்கையில் குறிப்பிட்டு காட்டியுள்ளது.
ஆனால் செப்டம்பர் மாதம் பெய்த மழை, ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் ஏற்பட்ட மழைப் பற்றாக்குறையின் பாதிப்பை கணிசமாக நீக்கிவிட்டதாக மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications