ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளை குறித்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் சவுதிக்கு விமான சேவைகளே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால், சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது. சவுதியில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கட்டாயம் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வான்வழி தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் இடைமறிப்பு நடவடிக்கைகளை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க கூடாது என்றும், இது சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.

சவுதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் அந்த நாட்டின் சட்டங்களையும் , தாக்குதல்கள் தொடர்பான வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என இந்திய தூதரகம் சமூக வலைதளங்கள் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வான்வெளியில் இடைமறித்து அழிக்கும் நிகழ்வுகள், தாக்குதல்களால் சேதமடைந்த இடங்கள் ஆகியவற்றை வீடியோ எடுப்பதோ, புகைப்படம் எடுப்பதோ அல்லது சமூக வலைதளங்களில் பகிர்வதோ கடுமையான சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என கடுமையாக எச்சரித்துள்ளது. எனவே இந்தியர்கள் இத்தகைய செயல்களை தவிர்க்கும்படி கேட்டு கொண்டுள்ளது.
ஏமன் நாட்டை சேர்ந்த மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீப காலமாக சவுதி அரேபியாவின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியாக ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ரியாத் , தம்மாம் விமான நிலையம் மீதே தக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களி இந்தியர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சூழலில் இது தொடர்பான காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் பரப்புவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுவதால் சவுதி அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதற்கிடையே ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் ரியாத் மற்றும் தம்மம் நகரங்களுக்கான விமான சேவைகளை நவம்பர் 7 வரை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதேபோல், ஜெட்டா நகருக்கான விமான சேவைகள் அக்டோபர் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சவுதியில் இந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் பணியில் இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது. ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மற்றும் மெக்கா பகுதிகளில் உள்ள 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைகள் மூலம், இந்தியர்களுக்கு உணவு, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உடனடி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் நிலையில் சவுதிக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது பலரையும் கலக்கமடைய வைத்துள்ளது. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஏற்கனவே இந்தியா வர முடியாமல் சவுதியில் சிக்கியுள்ளனர். அதே வேளையில் வேலை மார்க்கமாக அங்கே இருப்பவர்க்ளும் விமானம் கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக சவுதி அரசு வெளியிடும் உத்தரவுகளை இந்தியர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications

