இந்திய மக்களின் சேமிப்பில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது, பொதுவாக இந்திய மக்கள் தங்களுடைய சேமிப்பை அதிகளவில் வங்கிகளில் பாதுகாப்பாக வைக்கும் மனநிலை தான் அதிகம். ஆனால் முதல் முறையாக இந்திய மக்களின் சேமிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது.
செப்டம்பர் 2023ல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட அறிக்கையில் மக்களின் வங்கி சேமிப்புகள், பணம் மற்றும் முதலீடுகளை உள்ளடக்கிய இந்தியாவின் நிகரக் குடும்ப நிதி சேமிப்பு, 2023 ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது 2020-21 ஆம் நிதியாண்டில் 7.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்திய மக்கள் தங்களுடைய சேமிப்பை எப்படிப் பயன்படுத்துகிறார்கள்..? பணம் எங்கே போகிறது..? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து மத்திய அரசு ஒரு விளக்கம் கொடுத்தாலும், அதைப் பலரும் ஏற்க மறுத்த நிலையில் தற்போது முக்கிய ஆதாரம் வெளியாகியுள்ளது. சரி மத்திய அரசு என்ன கூறியது..?
ஆர்பிஐ தரவுகள் வெளியான போது இந்திய மக்களின் சேமிப்புக் குறைந்தது, கடன் அதிகரித்துள்ளது, இது பெரும் பிரச்சனை எனப் பேசிவரும் வேளையில் மத்திய நிதி அமைச்சகம் முக்கியமான விளக்கம் கொடுத்தது.
மத்திய நிதியமைச்சகம் கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு குறைந்த வட்டி விகிதங்களைப் பயன்படுத்தி மக்கள் சொந்த வீடு வாங்குவது மற்றும் வாகனங்கள் போன்ற சொத்துக்களை உருவாக்குவதற்கு அதிகச் செலவு செய்யத் தொடங்கின என்று விளக்கியது.
தற்போது இதேபோன்ற கருத்தை எஸ்பிஐ ரிசர்ச் தனது அறிக்கையில் தெரிவித்து, மத்திய நிதியமைச்சகத்தின் கருத்துக்கு ஆதரவாக நிற்கிறது. சொத்துக்களைச் சேர்ப்பதில் அதிகச் செலவுகளை இந்திய குடும்பங்கள் செய்த நிலையில், நிதி சேமிப்பு அளவு தடாலடியாகக் குறைய வழிவகுத்துள்ளது.
இதன் மூலம் SBI ரிசர்ச் அமைப்பு குடும்ப நிதி சேமிப்பு அளவீட்டில் சொத்துக்கள் மற்றும் நிதியை ஆகிய இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய குடும்பங்களுக்கு அளிக்கப்பட்ட ரீடைல் கடன் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை வீடு, கல்வி மற்றும் வாகனம் வாங்குவதற்குச் சென்றதாக எஸ்பிஐ தனது அறிக்கையில் தரவுகளைப் பட்டியலிட்டு உள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பின்பு நிலவிய குறைந்த வட்டி விகிதம் வாயிலாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய குடும்பங்கள் சொத்துக்களைச் சேர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்திய காரணத்தால் நிதி சேமிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனத் தனது அறிக்கையை முடித்துள்ளது.


Click it and Unblock the Notifications