இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் (எல்ஐசி) தனது பங்குகளை விற்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தயாராகி வருகிறது. ஏன் இந்த முடிவு..?
பங்குச்சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனமும் செபி அமைப்பின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டியது கட்டாயம். அந்த வகையில் எல்ஐசி-யில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் மத்திய அரசு, செபியின் விதிமுறைப்படி 10 சதவீத பங்குகளை பொது சந்தையில் இருக்க வேண்டும். இந்த விதிமுறைக்கு இணங்கவே தற்போது எல்ஐசியில் மத்திய அரசு பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.

தற்போது, மத்திய அரசு எல்ஐசியில் 96.5% பங்குகளை வைத்துள்ளது. செபி கொடுத்த கால அவகசத்தின் படி 2027 மே 16க்குள் 10% பொது பங்கு விதிமுறையை அடைய வேண்டும். இதற்காக மத்திய அரசு 6.5% LIC பங்குகளை விற்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த விதிமுறைக்கு இணங்க மத்திய அரசு, எல்ஐசியில் தனது பங்குகளை பொது பங்கு வழங்கல் (OFS) முறையில் விற்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த திட்டம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, பங்கு விற்பனையின் அளவு, விலை, மற்றும் நேரம் ஆகியவை எல்ஐசி நிர்வாகம் DIPAM உடன் இணைந்து ஆலோசனை செய்து முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கு விற்பனையை உறுதி செய்ய, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் முதலீட்டு மற்றும் பொதுத் துறை சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து முடிவெடுக்கும்.
2022 மே மாதம் எல்ஐசி-யின் ஐபிஓ-வில் 3.5% பங்குகளை ஒரு பங்குக்கு 902-949 ரூபாய் விலை வரம்பில், முதல் பொது பங்கு வழங்கல் (ஐபிஓ) மூலம் விற்றது. இந்த விற்பனை மூலம் அரசுக்கு சுமார் 21,000 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியது. இந்த ஐபிஓ, இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, எல்ஐசியின் சந்தை மூலதனமயமாக்கல் 5.85 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஜூலை 10, 2025 அன்று, எல்ஐசி பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 2.27% சரிந்து, ஒரு பங்குக்கு 924.40 ரூபாயில் வர்த்தகமாகின.


Click it and Unblock the Notifications