டெல்லி: வீடுகளில் இருக்கும் பழைய செய்தித்தாள்கள், புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து பணமாக்குவது இந்திய மக்களின் வழக்கம். மத்திய அரசு இதே வழக்கத்தை பின்பற்றி 2,364 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருக்கும் சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது.
அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட பேப்பர் உள்ளிட்ட பல்வேறு கழிவு பொருட்களை விற்பனை செய்து மத்திய அரசு 2,364 கோடி வருவாயாக ஈட்டியுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் சிறப்பு பிரச்சாரம் 4.0 வின் கீழ் இந்தியாவின் மிகப்பெரிய தூய்மை இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.

அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு பின்னர் தேவையற்ற பொருட்களாக மாறிய பேப்பர் உள்ளிட்ட கழிவுகளை விற்பனை செய்து தூய்மையாக மாற்றுவதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம். இந்த பணி தற்போது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு முதலே அரசு சிறப்பு பிரச்சாரம் என்பதை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் அரசு அலுவலகங்களில் கழிவுகளாக தேங்கிய பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் மத்திய அரசுக்கு 2,364 கோடி வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக கடந்த அக்டோபரில் அரசு அலுவலகங்களில் இந்த கழிவுகளை விற்பனை செய்ததன் மூலம் 650 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கிடைத்தது என அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதனை குறிப்பிட்டு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி திறன்மிகு மேலாண்மை மற்றும் செயலுக்கமான அணுகுமுறை இந்த தூய்மை இயக்கம் வெற்றி அடைய வழி வகுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு முயற்சி எவ்வாறு நிலையான முடிவுகளுக்கு வழிகாட்டும் என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பாக கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பு பிரச்சாரம் 4.0 தொடங்கப்பட்டது.
இதன்படி மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் நாடு முழுவதிலும் உள்ள அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளை மதிப்பாய்வு செய்வது அல்லது தீர்வு காண்பது, இறுதி முடிவுகள் எடுப்பது, பொதுமக்களிடமிருந்து பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முனைகளில் இருந்து வரும் புகார்களுக்கு தீர்வு காண்பது, அரசு துறை அலுவலகங்களை தூய்மைப்படுத்துவது, பழைய உபயோகம் அற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது ஆகிய பணிகள் இதன் கீழ் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணியில் 5 லட்சம் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த பழைய பொருட்களை அகற்றியதன் வாயிலாக தற்போது அரசு அலுவலகங்களில் 190 லட்சம் சதுர அடி இடம் காலியாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications