சுதான்ஷு மணி, இந்திய ரயில்வேயில் முன்னாள் பொதுமேலாளர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வடிவமைப்பில் மூளையாகச் செயல்பட்டவர். அவர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விஷயத்தில் இந்திய அரசு தவறான முடிவை எடுத்து விட்டது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் மற்ற ரயில்களை விட மிக அதிகமாகும். இது சாமானிய மக்களின் தேவையை தீர்க்கத் தவறிவிட்டதாக சுதான்ஷு மணி கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே வந்தே பாரத் ரயில்கள் மீது இந்திய ரயில்வே ஈடுபாட்டைக் காட்டி வருகிறது. ஆனால் ஏசி ரயிலில் பயணிக்க முடியாத சாமானிய மக்களைப் பற்றி அக்கறை வைக்க இந்திய ரயில்வே தவறிவிட்டது.
சில ஆண்டுகளாகவே ஏசி கோச்களில் ரிசர்வ் செய்யாத பயணிகள் ஆக்கிரமிப்பு செய்வதாக நாட்டின் பல பகுதிகளிலும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
அடிப்படை கட்டமைப்பு, ரயில்நிலையங்களை சீரமைப்பது போன்ற நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ரிசர்வ் செய்யாத பயணிகளின் வசதிகள் பற்றி கருதுவதற்கு இந்திய ரயில்வே தவறிவிட்டது.
தலைமை டிசைன் இன்ஜினியராக பணியாற்றிய சுதான்ஷு மணி, வேலையாட்களும், மாணவர்களும் ரிசர்வ் செய்த பெட்டிகளில் பயணிக்கும் சூழ்நிலை தொடர்வதாகக் கூறுகிறார்.
முன்னதாக பிகார், ஒடிசா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த கூலி வேலை செய்பவர்களும் மாணவர்களும் ரிசர்வ் பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் பயணித்து வந்தனர். இப்போது அந்த நிலை மிகவும் மோசமாகி விட்டது என்று மணி கூறுகிறார். இப்போது அதிகளவு ஏசி பெட்டிகளைத் தயாரிப்பதில் இந்திய ரயில்வே முனைப்பாக இருப்பதால் நான்-ஏசி பெட்டிகள் தயாரிப்பு குறைந்து விட்டது.
ரயில்வே அமைச்சராக பியூஷ் கோயல் இரு்நதபோது படிப்படியாக அனைத்து ரயில்களும் ஏசி ரயில்களாக மாற்றப்படும் என அறிவித்திருந்தார். குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் ஏசி ரயில் பயணம் அளிக்கப்படும் என்று அவர் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றார்.
அரசு மீது புகார்கள் அதிகரித்ததால் அதன் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு குறைந்த அளவு ஏசி கோச்களும் அதிக அளவில் ஏசி அல்லாத கோச்களும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இந்த முடிவு மிகவும் தாமதமாகவே எடுக்கப்பட்டது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ஸுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தாலும் சாமானிய பயணிகள் மீதான அக்கறை இல்லாமல் போய்விட்டது. இதனால் சாமானிய மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் நிலை ஏற்பட்டு விட்டது என்று மணி கூறுகிறார்.
வந்தே பாரத் எந்த சாதனையையும் செய்யவில்லை. இருந்தாலும் அதை தொடர்ந்து இயக்கலாம். அதேநேரத்தில் சாமானிய மக்கள் பற்றியும் நினைக்க வேண்டும். இதை இந்திய ரயில்வே செய்யத் தவறி விட்டது.
எனவே வந்தே பாரத் ரயிலில் ஏசி அல்லாத பெட்டிகளையும் இணைப்பது பற்றி இந்திய ரயில்வே முடிவெடுக்க வேண்டும் என்று சுதான்ஷு மணி வலியுறுத்துகிறார்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications