சென்னை: உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் விற்பனை நிறுவனம் என பட்டத்தை சீனாவின் BYD கைப்பற்றிய நிலையில், 2வது இடத்திற்குத் தள்ளப்பட்ட எலான் மஸ்க்-ன் டெஸ்லா நிறுவனத்திற்கு இந்திய அரசு சிறப்பு சலுகைகள் வழங்காது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய அனைத்து எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களையும் கவரும் வகையில் சட்டங்கள் மற்றும் சுங்க வரி விதிமுறைகள் வகுக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு நிறுவனத்திற்காக மட்டும் தனி கொள்கையை வகுக்க முடியாது என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது மெகா ஜிகா பேக்ட்ரியை அமைக்க தனது கார்களின் இறக்குமதிக்கு சுங்க வரி சலுகையை விடாப்பிடியாக வேண்டும் என கேட்டு வருகிறது. அதன்படி, 40,000 அமெரிக்க டாலருக்கு குறைவான விலை கொண்ட கார்களுக்கு 70 சதவீத சுங்க வரி தள்ளுபடியும், அதற்கு மேற்பட்ட விலை கொண்ட கார்களுக்கு 100 சதவீத சுங்க வரி தள்ளுபடியும் வழங்க வேண்டும் என டெஸ்லா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பியூஷ் கோயல், எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவையும் குறைக்க முடியும் என அரசு அறிவுறுத்திள்ளது என்றும், ஆனால் இதற்காக எந்த ஒரு நிறுவனத்திற்கும் தனித்தனி கொள்கைகளை வகுக்க முடியாது, உலக அளவில் உள்ள அனைத்து எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களையும் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க ஊக்குவிக்கும் பொதுவான கொள்கைகளை மட்டுமே அரசு வகுக்க முடியும் என்று தெரிவித்தார்.
ஐரோப்பா, அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் இத்துறை சார்ந்தவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வருகிறோம் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைப்பதற்குச் சுங்க வரி சலுகையை முக்கிய நிபந்தனையாகவும், முன் நிபந்தனையாகவும் கேட்டு இருந்தது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக விதிக்கப்படும் அதிக வரி விகிதங்கள் வெளிநாட்டு கார் உற்பத்தியாளர்களுக்கும் நீண்ட கால பிரச்சினையாக இருந்து வருகிறது.
அரசாங்கம் எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்கும் அல்லது அதன் நலன்களுக்காகவும் சிறப்புக் கொள்கைகளை வகுக்காது. யார்வேண்டுமானாலும் தங்களுடைய கோரிக்கைகளை வைக்கலாம் ஆனால், அரசாங்கம் அவற்றை அப்படியே அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்காது என்று பியூஷ் கோயல் உறுதியாகக் கூறினார்.


Click it and Unblock the Notifications