க்ரூட் ஸ்டீல் உற்பத்தியில் உலக அளவில், இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கும் வேளையில், சுத்திகரிக்கப்பட்ட ஸ்டீல் அதிக அளவில் இறக்குமதி செய்வதில் தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டாக (2024-25 நிதியாண்டில்) முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையை மாற்ற மத்திய அரசு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
2025ஆம் நிதியாண்டில் சுத்திகரிக்கப்பட்ட ஸ்டீல் பொருட்களின் இறக்குமதி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்து 9.5 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டியுள்ளது. உள்நாட்டுச் சந்தையில் அதிகப்படியாக உற்பத்தி செய்யப்பட்டாலும் வெளிநாட்டில் இறக்குமதி செய்யும் மோசமான நிலை இந்தியாவில் நிலவி வருகிறது.

இதேபோல் வெளிநாட்டு ஸ்டீல் பொருட்கள் தொடர்ச்சியாக இந்தியச் சந்தைக்கு வருவது மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெரும் வர்த்தக இழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்ற மத்திய அரசு புதிய வரியைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
சீனா மற்றும் பிற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் மலிவான ஸ்டீல் பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவுக்குள் வரும் ஸ்டீல்ப் பொருட்களுக்கு 12% என்ற தற்காலிக வரியை (safeguard duty) விதிக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வரி இன்னும் மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை, ஆனால் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர் எனப் பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
உள்நாட்டு ஸ்டீல் உற்பத்தி மற்றும் அதன் வர்த்தகத்தைப் பாதிக்கும் மலிவான இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதே இந்த பாதுகாப்பு வரியின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது. இந்த வரியைக் கூடிய விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம் மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வர்த்தக குறைபாடுகள் இயக்குநரகத்தின் (DGTR) பரிந்துரையைத் தொடர்ந்து இந்த 12 சதவீத வரி விதிக்கும் முடிவுகள் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிகரித்திருக்கும் மலிவான ஸ்டீல் பொருட்களின் இறக்குமதி அளவுகள் பல வருட உச்சத்தைத் தொட்ட நிலையில் இந்திய உற்பத்தியாளர்களைக் காக்கும் பொருட்டு சில குறிப்பிட்ட ஸ்டீல்ப் பொருட்களுக்கு 200 நாட்களுக்கு 12% வரி விதிக்க DGTR பரிந்துரைத்திருந்தது.


Click it and Unblock the Notifications