பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் கிட்டத்தட்ட 2 வருடங்களாக மிகவும் மந்தமான வர்த்தகத்தைப் பெற்ற காரணத்தாலேயே ஐடி ஊழியர்களுக்குக் குறைவான சம்பள உயர்வு, பலருக்கும் சம்பள உயர்வு ரத்து, பதவி உயர்வு ஒத்திவைப்பு, வேரியபிள் பே குறைப்பு எனப் பல விஷயங்கள் நடந்துள்ளது.
ஆனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்பதற்கான சிக்னல் வந்த உடனேயே கடந்த 2 மாதங்களாக புதிய ஒப்பந்தங்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவக்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்ததையொட்டி, அதிக எண்ணிக்கையிலான ஒப்பந்தங்களை கையெழுத்திடும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ஐடி ஊழியர்களுக்கான பொற்காலம் மீண்டும் பிறந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஒட்டுமொத்த ஐடி சேவைக்கான டிமாண்ட் அதிகரித்து சம்பள உயர்வு முதல் வேலைவாய்ப்பு உயர்வு வரையில் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் குறைந்தது 33 ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு உள்ளனர். இதில் மிக முக்கியமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மட்டும், ஐர்லாந்தின் பிரிமார்க், ரோல்ஸ்-ராய்ஸ், சிட்னி மாரத்தான் மற்றும் சமீபத்தில் மெக்டொனால்ட்ஸ் பிலிப்பைன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் நான்கு ஒப்பந்தங்களை கையெழுதியுள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான ஒப்பந்தங்களை (மூன்று) கையெழுதியுள்ளது. இன்போசிஸ்-க்கு அடுத்தபடியாக காக்னிசென்ட் இதுவரை Sector Alarm, Delaware Department of Labor, TDC Net, ServiceNow, Metro Bank மற்றும் பின்லாந்து நாட்டின் தபால் சேவை நிறுவனமான Posti group ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை கையெழுதியுள்ளது.
நாட்டின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக், Xerox உடன் ஒரு பெரிய திட்டத்தையும், ஜெர்மனியின் apoBank உடன் மற்றொரு ஒப்பந்தத்தையும் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், விப்ரோ ஜெர்மனியின் Mahle மற்றும் John Lewis Partnership ஆகிய நிறுவனங்களுடன் குறைந்தது மூன்று ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது.
ஐந்தாவது பெரிய ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா, டோஹாவின் Ooredoo மற்றும் Marshall Group ஆகிய நிறுவனங்களுடன் இரண்டு ஒப்பந்தங்களை கையெழுதியுள்ளது.
இவை அனைத்தையும் விட முக்கியமாக ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் சுமார் 26 பில்லியன் டாலர் மதிப்பிலான 700 டெக் சேவை ஒப்பந்தங்கள் ரினிவல் செய்யப்பட உள்ளது. இந்த 700 ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை மீண்டும் அதே நிறுவனங்களுக்கு ரினிவல் செய்யப்படும் என்பாலும் சில குறிப்பிடத்தக்க எண்ணிக்கை கைமாறும்.


Click it and Unblock the Notifications