டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, HCL டெக் மற்றும் ஆக்சென்ச்சர் உள்ளிட்ட முன்னணி இந்திய IT சேவை நிறுவனங்கள், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெஞ்ச் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன. வருவாய் வளர்ச்சி மந்தமாக இருப்பதாலும், லாப வரம்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல நிறுவனங்கள் புதிய பட்டதாரிகளை அதிக அளவில் பணியமர்த்தி, எதிர்கால தேவைகளப் பூர்த்தி செய்யும் வகையில் "பெஞ்ச்" எனப்படும் ஒரு குழுவை பராமரித்து வந்தன. ஆனால் தற்போது சில காரணங்களால் பெஞ்ச்-இல் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவனங்கள் குறைக்கத் தொடங்கியுள்ளன.

எந்த ப்ராஜெக்டிலும் பயன்படுத்தப்படாத ஊழியர்கள் பெஞ்ச்-சில் இருப்பார்கள். ஆனால் பென்ச்-சில் இருக்கும் ஊழியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். எந்த நேரத்தில் இவர்கள் தேவைப்படுகிறார்களோ அந்த நேரத்தில் அவர்கள் ப்ராஜெக்டுகளில் அசைன் செய்யப்படுவார்கள். ஒரு வேளை ஏற்கனவே இருக்கும் ப்ராஜெக்ட்களில் யாரேனும் குறைந்தாலோ அல்லது அதிக அளவில் ஊழியர்கள் தேவைப்பட்டாலோ பெஞ்சில் இருக்கும் பணியாளர்களை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும்.
UnearthInsight என்ற நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, தற்போது IT துறையில் சராசரி பெஞ்ச் நேரம் 35-45 நாட்களாக குறைந்துள்ளது. ஆனால் 2020 மற்றும் 2021-ஆம் நிதியாண்டில் 45 முதல் 60 நாட்களாக இருந்தது. அந்த சமயத்தில் ஐடி துறையின் வருவாயும் அதிகமாகவே இருந்தது. அதிக லாபம் ஈட்டிய காலகட்டத்தில் ஊழியர்கள் பெஞ்சில் இருக்கும் சராசரி நேரமும் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளதால், பெஞ்சில் ஊழியர்களை வைக்கும் நேரமும் குறைந்துள்ளது. இதேபோக்குதான் 2026-ஆம் நிதியாண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 முதல் 14 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ள ஊழியர்களையே பென்ச்-இல் வைக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங் போன்ற முக்கிய திறன்களை கொண்ட நபர்களுக்கு தான் தற்போது தேவை அதிகமாக உள்ளது.
இதற்கு முன்னர் IT நிறுவனங்களின் உள்ள மொத்த ஊழியர்களில் 10 முதல் 15 சதவீத ஊழியர்கள் மட்டுமே பெஞ்ச்-இல் இருந்தனர். அதாவது, ஒரு நிறுவனம் 100 ஊழியர்களைக் கொண்டிருந்தால், 10 முதல் 15 பேர் வரை பென்ச்-இல் இருந்தனர். ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 2 முதல் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று டீம்லீஸ் டிஜிட்டல் அறிக்கை தெரிவித்துள்ளது. இதிலிருந்து இந்திய IT நிறுவனங்கள் தற்போதைய சந்தை சூழலுக்கு ஏற்ப தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைத்து வருகின்றன என்பது மட்டும் தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications