மேற்கு ஆசியாவில் மூன்றாவது வாரமாக போர் நீடித்து வருகிறது இது இந்தியாவில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய், எல்பிஜி , உரம் உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டிய சரக்கு கப்பல்கள் வளைகுடா நாடுகளிலேயே தேக்கமடைந்து விட்டன.
போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருக்கிறது. தங்களுடைய அனுமதி இல்லாமல் ஹார்முஸ் ஜலசந்தியை எந்த ஒரு கப்பல் கடந்தாலும் வீழ்த்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வர வேண்டிய சரக்கு கப்பல்கள் சூழல் வராமல் அங்கேயே சிக்கியுள்ளன. நூற்றுக்கணக்கான இந்திய மாலுமிகளும் சிக்கியுள்ளனர்.

கப்பல் போக்குவரத்து நின்றதால் இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு மற்றும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில் ஈரான் போர் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் என்பதை கடந்து இந்தப் போர் அண்டை நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் இந்தியா அரபிக்கடல் மற்றும் ஓமன் வளைகுடா பகுதியில் கூடுதலாக போர் கப்பல்களை அனுப்ப நடவடிக்கை எடுத்திருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. ஈரானிடம் அனுமதி பெற்று வளைகுடா நாடுகளில் சிக்கி இருக்கக்கூடிய இந்திய சரக்கு கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் கூடிய சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறதாம்.

போர் பதற்றம் அதிகரித்து இருப்பதால் இந்த சரக்கு கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தியா கூடுதலாக போர் கப்பல்களை அனுப்பி வைக்கிறதாம். இந்திய கடற்படை கிட்டத்தட்ட ஆறு போர் கப்பல்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலைநிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் கிழக்குப்பகுதியில் நிலைநிறுத்தப்படும், ஹார்முஸ் ஜலசந்தியின் நீர்வழி தடத்தில் இந்த போர் கப்பல்கள் நுழையாது. இந்தியா போர் கப்பல்களை அங்கே நிலைநிறுத்துவதற்கு இருக்கக்கூடிய ஒரே காரணம் இந்த பாதை வழியே இந்திய சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக வெளியே வந்து வட அரேபிய அரபிக்கடலில் நுழைய வேண்டும் என்பதற்காகத்தான்.
முன்னதாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஈரானின் அனுமதி பெற்று இரண்டு எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதற்கு வழிவகை செய்தது. மேற்கொண்டு பல்வேறு சரக்குக் கப்பல்கள் இந்த பாதையில் கடந்து வருவது தொடர்பாக அரசு தொடர்ந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய வண்ணம் இருக்கிறது. இதற்கிடையே ஈரான் போர் தீவிரமடைந்த வண்ணம் இருப்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
இதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டு அரபிக்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்கு கப்பல்களின் மீது தாக்குதல் நடத்திய போது இந்திய கப்பல்களுக்கு பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு இதே போல போர் கப்பல்களை அனுப்பியது. தற்போதைக்கு வளைகுடா நாடுகளில் இந்திய கொடி ஏந்திய 22 கப்பல்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications