ஒரு காலத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டால் லைஃப் செட்டில் ஆகிவிட்டது என கூறுவார்கள். ஆனால் இப்போது எல்லாம் கத்தி மேல் நடப்பது போல ஐடி ஊழியர்கள் வாழ்க்கை. அந்த ஒரு மின்னஞ்சல் வரும் வரை தான் வேலை, அது வந்துவிட்டால் வேலை இல்லை.
புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களும் சரி அல்லது பல ஆண்டுகாலம் நிறுவனத்திற்காக உழைத்தவராக இருந்தாலும் சரி வேலை விட்டு நீக்க வேண்டும் என நினைத்து விட்டால் இதுநாள் வரை நீங்கள் என்ன வேலை செய்தீர்கள் நிறுவனத்திற்காக எவ்வளவு உழைப்பை கொடுத்தீர்கள் என்பதை எல்லாம் மறந்துவிடுவார்கள்.

உலகின் முன்னணி ஐடி நிறுவனமான oracle நிறுவனத்தில் வேலை செய்து வந்த 30,000 பேருக்கு இது தான் நிலைமை. இன்று காலை 5.59 மணி வரை அவர்கள் இந்நிறுவன ஊழியர்கள், ஆனால் அடுத்த நிமிடமே அவர்கள் வேலையில் இருந்து தூக்கப்பட்டனர். oracle நிறுவனம் திடீரென தங்களுடைய ஊழியர்கள் 30,000 பேரை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது. இந்த 30,000 பேரில் 12,000 ஊழியர்கள் இந்தியாவில் வேலை செய்தவர்கள்.
காலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் 30,000 ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி இது தான் இந்த நிறுவனத்தில் உங்களுக்கு கடைசி நாள் என கூறியுள்ளனர். இந்நிறுவனத்தின் நிறுவனத்தின் கிளவுட் அப்ளிகேஷன் பிரிவு, கிளவுட் இன்ஜினியரிங், டேட்டா சென்டர் மற்றும் ஏஐ பிரிவுகளில் வேலை செய்தவர்கள் இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஒரு மாத காலத்திற்குள் மேலும் ஒரு பணி நீக்க அறிவிப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது தற்போது நிறுவனத்தில் வேலை செய்து வரக்கூடிய நபர்களுக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இதற்கிடையே oracle நிறுவனம் , பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உரிய நிதி இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தில் பெங்களூரு அலுவலகத்தில் குழு மேலாளராக இருந்த ரிஷிகேச நர்ஷா என்பவர் லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தனுடைய பணி நீக்கம் குறித்து விரிவாக பதிவு செய்து இருக்கிறார். அதில் சில சமயங்களில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமலேயே நம்முடைய பயணங்கள் முடிவுக்கு வந்துவிடுகின்றன. என்னுடைய பிராரிட்டி மாறிவிட்டது, இனி நான் பிராஜெக்ட் குறித்து கவலைப்பட தேவையில்லை என கூறியுள்ளார்.
என்னைப் போல பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கும் இருக்கக்கூடிய ஒரே கேள்வி அடுத்த குடும்பத்தை எப்படி பார்த்துக் கொள்ளப் போகிறேன் , என்னுடைய நிதி நிலைமை என்னாகப் போகிறது , எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது தான் என கூறியுள்ளார். oracle நிறுவனம் ஒரு ஊழியராக இருந்த என்னை ஒரு தலைவராக செதுக்கியது என கூறியிருக்கும் அவர் இனி புதிய வேலையை தேட வேண்டும், 16 ஆண்டுகால வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications