சிங்கப்பூர் அரசின் முதலீட்டு நிறுவனமான Temasek Holdings நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கார்ப்ரேட் வழக்கறிஞர் ஆன தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த மாபெரும் முதலீட்டு நிறுவனம் இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்து முக்கிய முதலீட்டாளராக விளங்குகிறது. 2004 அக்டோபர் 1 முதல் Temasek Holdings நிறுவனத்தின் தலைவர் பதவியில் சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ ஹெய்சின் லூங் அவர்களின் மனைவி ஹோ சிங் இருந்து வருகிறார்.
Temasek Holdings நிறுவனத்தில் கடந்த 10 வருடமாகப் பணியாற்றி வரும் தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா நாட்டின் முன்னணி கார்ப்ரேட் வழக்கறிஞர் ஆகவும் விளங்குகிறார். இந்நிறுவனத்தில் பல்வேறு முக்கியப் பதவிகளில் பணியாற்றிய தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா 2 வருடம் அமெரிக்கச் சந்தை வர்த்தகத்தின் தலைவராக இருந்தார்.
2019ஆம் ஆண்டுத் தில்ஹான் Temasek இண்டர்நேஷனல் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில், நிறுவனத்தின் அனைத்து முதலீட்டு மற்றும் நிர்வாகம் மற்றும் போர்ட்போலியோ நிர்வாகப் பணிகளையும் மேற்கொண்டார்.
இந்நிலையில் Temasek இண்டர்நேஷனல் பதவி உடன் Temasek Holdings நிறுவனத்தின் பொறுப்புகளை அக்டோபர் 1 முதல் ஏற்கும் தில்ஹான் பிள்ளை சந்திரசேகரா மொத்த குழுமத்தையும் நிர்வாகம் செய்ய உள்ளார். இப்பதவியில் இருந்த ஹோ சிங் பல வருடங்களாகத் தனது இடத்திற்குச் சரியான தலைவரைத் தேர்வு செய்யும் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.