2026ஆம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ஆம் தேதி இந்திய அரசு கீழ் இயங்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.111 அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது. இருப்பினும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது சாமானிய மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் அரசு நிறுவனங்கள் இந்த விலை திருத்தத்தை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் அறிவித்து வருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் உலக சந்தையில் வாங்கும் எரிபொருள் விலையின் ஏற்ற இறக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாதந்தோறும் இத்தகைய விலை மாற்றத்தை செய்து வருகிறது.
இந்த வணிக எல்பிஜி சிலிண்டர்கள் முக்கியமாக ஹோட்டல்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சிறு வணிகங்களில் பயன்படுத்தப்படுவதால், இந்த உயர்வு இத்துறைகளை பாதிக்கும். உதாரணமாக வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் ஹோட்டல்களில் உணவு விலை உயரலாம்.
முக்கிய நகரங்களில் விலை நிலவரம்
டெல்லியில் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.1,580.50 இலிருந்து ரூ.1,691.50 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் ரூ.1,684 இலிருந்து ரூ.1,795 ஆகவும், மும்பையில் ரூ.1,531.50 இலிருந்து ரூ.1,642.50 ஆகவும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ரூ.1,739.50 இலிருந்து ரூ.1,849.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலைகள் உள்ளூர் வரிகளைப் பொறுத்து சற்று மாறுபடலாம்.
இந்த விலை மாற்றம் உலகளாவிய எண்ணெய் விலை போக்கைப் காட்டுகிறது. எதிர்காலத்தில் சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து மேலும் மாற்றங்கள் வரலாம். வணிக உரிமையாளர்கள் இந்த உயர்வை கவனத்தில் கொண்டு திட்டமிட வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.


Click it and Unblock the Notifications