உலகின் நான்காவது பெரிய ரயில் சேவையாக இந்தியன் ரயில் சேவை உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் வகையில் பெரிய அளவில் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் அதிக அளவில் விரும்பி பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக ரயில் சேவை அமைந்துள்ளது. அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பெரிய கட்டமைப்பை இந்தியன் ரயில்வே கொண்டுள்ளது.பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல வசதிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது.
இந்தநிலையில், பொது டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கான விதிகளில் திருத்தம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது கோடிக்கணக்கான பயணிகளைப் பாதிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாகும். அதாவது, கடந்த வாரம் கும்ப மேளாவிற்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் 18 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இந்த மாற்றங்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

என்னென்ன மாற்றங்கள்: பொதுவாக பயணிகள் பொது டிக்கெட்டுடன் எந்த ரயிலிலும் ஏறலாம், ஆனால் தற்போது, கொண்டுவரப்படும் புதிய மாற்றத்தில் ரயிலின் பெயர் டிக்கெட்டில் குறிப்பிடப்படலாம். இதன்மூலம் பயணிகள் ஒரே ரயிலில் பயணம் செய்யாமல் அவரவர் ரயிலுக்கு செல்லும் வகையில் திருத்தம் செய்யப்படலாம். இது குறிப்பிட்ட ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க வழிவகுக்கும்.
டிக்கெட் செல்லுபடியாகும் காலம்: பொது டிக்கெட் வாங்கிய நேரத்திலிருந்து 3 மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்பது பல பயணிகளுக்குத் தெரியாது. எனவே, இந்தக் காலக்கெடுவிற்குள் பயணம் தொடங்கப்படாவிட்டால், டிக்கெட் செல்லாது.
மாற்றம் ஏன் அவசியம்? பொதுவாக அதிக கூட்டநெரிசல் ஏற்பட்டால், அது விபத்துகள் ஏற்பட வழிவகுக்கும். பொது டிக்கெட்டுகளில் ரயில் பெயர்களை குறிப்பிடுவதன் மூலம் பயணிகளின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த அதிகாரிகளுக்கு உதவும்.
இந்த மாற்றம் பயணிகளை எவ்வாறு பாதிக்கும்? எந்த ரயிலில் ஏறலாம் என்பது பற்றி பயணிகளிடையே தெளிவு கிடைக்கும். மேலும் இது, வெவ்வேறு ரயில்களில் பயணிகளை சமமாகப் பிரிக்க உதவும். நெரிசல் மற்றும் விபத்துக்களின் ஆபத்து குறையும். தற்போது, பயணிகள் எந்த ரயிலிலும் ஏறலாம், ஆனால் இந்த மாற்றத்தின் மூலம், அவர்கள் ஒதுக்கப்பட்ட ரயிலில் மட்டுமே பயணிக்க வேண்டியிருக்கும்.
ஒரு பயணி தனக்கு ஒதுக்கப்பட்ட ரயிலைத் தவறவிட்டால், அவர்கள் புதிய டிக்கெட்டை வாங்க வேண்டியிருக்கும். இந்தநிலையில், பொதுப் பெட்டிகளில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்திய ரயில்வே விதிகளில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications