டெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தை தொடர்ந்து இந்திய ரயில்வே புதிதாக 13,000 துணை ரயில் ஓட்டுனர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கும் இந்திய ரயில்வே வாரியம் ஒரு புதிய வழிகாட்டுதல்களை அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பணியில் உள்ள அசிஸ்டன்ட் லோகோ பைலட்டுகளின் பணிச்சுமையை குறைக்கும் பொருட்டு இந்த புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஜனவரி மாதத்தில் ரயில்வே வாரியம், அனைத்து மண்டலங்களிலும் மொத்தமாக 5,696 துணை லோகோ பைலட்டுகளை பணிக்கு அமர்த்த ஒப்புதல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்த எண்ணிக்கை 3.3 மடங்கு உயர்த்தி மொத்தமாக 18,799 துணை லோகோ பைலட்டுகளை பணிக்கு அமர்த்த அனுமதி தந்துள்ளது.
லோகோ பைலட்டுகள் பற்றாக்குறை காரணமாக தற்போதுள்ள ஊழியர்கள் பெருமளவில் பணிச்சுமைக்கு ஆளாவதாக தெரிவிக்கின்றனர். நீண்ட நேரம் வேலை செய்வதால் சோர்வு ஏற்பட்டு சிக்கலான தருணங்களில் சரியான முடிவெடுக்க முடியாமல் தவிக்கின்றனர், இது விபத்தை ஏற்படுத்துகிறது என நீண்ட காலமாகவே புகார் இருந்து வருகிறது.
லோகோ பைலட்டுகள் தரப்பிலும் தங்களின் பணி நேரத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் லோகோ பைலட் பணியிடங்களை ரயில்வே அதிகரித்துள்ளது.
புதிதாக துணை லோகோ பைலட்டுகளை வேலைக்கு அமர்த்துவதற்கான நடைமுறைகளை உடனடியாக துவங்கும் படி ரயில்வே வாரியம் அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.
தற்போதைய சூழலில் புதிதாக ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி அவர்கள் தேர்வு எழுதி முடித்து மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் நிறைவடைந்து பணியில் அமர ஆறு மாதங்கள் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி காலமும் உண்டு.
ரயில்வே வாரியத்தின் இந்த முடிவினை வரவேற்பதாக லோகோ பைலட் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தங்களது பணி சுவை குறையும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சி இந்தியாவின் 21% லோகோ பயணங்கள் மற்றும் 8% துணை லோகோ பைலட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்திருந்தது.
திங்கள்கிழமை மேற்கு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தின் நியூஜல்பைகுரி ரயில் நிலையத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் நின்றிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதியது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications