151 மார்டன் ரயில்கள்.. இந்திய ரயில்வே துறையின் ரூ.30,000 கோடி திட்டம்..!
இந்தியாவில் சுமார் 109 வழித்தடத்தில் புதிய பாசஞ்சர் ரயில் இயக்க சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டைத் தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஈர்க்க இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இது இந்திய ரயில்வே துறை போக்குவரத்தை மிகப்பெரிய அளவில் மாற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரயில்வே துறை தற்போது தனியார் நிறுவனத்தின் ஏல விண்ணப்பத்தைப் பெற முடிவு செய்துள்ள நிலையில், ஆர்டர்-ஐ பெறும் தனியார் நிறுவனங்கள் 35 வருடம் ரயில்களை இயக்கலாம். மேலும் ரயில் இயக்குவதற்கான நிதி முதலீடு, பொருட்கள் கொள்முதல், செயல்படுத்துதல், பழுது பார்த்தல் என அனைத்தும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பு.
இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனங்கள் இந்திய ரயில்வே துறைக்கு நிலையான இழுத்துச் செல்லப்படுவதற்கான கட்டணங்கள், பயன்பாட்டிற்குத் தகுந்த மின்சாரக் கட்டணங்கள், மொத்த வருவாயில் ஒரு பங்கு தொகையைக் கொடுக்க வேண்டும்.

இலக்கு
இத்திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வே, மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும், அதிகப்படியாகப் பாதுக்காப்பு கொடுக்கவும், உலகதரம்வாய்ந்த அனுபவத்தைப் பயணிகளுக்குக் கொடுக்கவும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், maintenance அளவை குறைக்கவும், கால தாமதத்தைக் குறைக்கவும் முடியும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

3-5 வருடங்கள்
இத்திட்டத்தைக் கையில் எடுக்கும் தனியார் நிறுவனங்கள் போக்குவரத்துத் தளத்தைத் தயாரிக்கவும், இந்திய ரயில்வே துறையிடம் சேவைக்கான ஒப்புதல் பெறவும் குறைந்தது 3 முதல் 5 வருட காலம் ஆகும் என முன்னாள் ரயில்வே துறை நிர்வாகத் தலைவர் அருனேந்திரா குமார் தெரிவித்தார்.

நன்மை
தனியார்த் துறை 100 வருடப் பழமையான இந்திய ரயில்வே துறைக்குள் வரும் நிலையில், ரயில் பெட்டியின் டிசைன் மிகப்பெரிய அளவில் மாறும் வாய்ப்புகள் உள்ளது, இதனால் மக்களுக்கு மேம்பட்ட சேவை கிடைக்கும். இதேபோல் இந்தியாவில் 95 சதவீத ரயில்கள் தாமதமாகத் தான் வருகிறது, இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் களத்தில் இறங்கும் போது இந்த நிலை மாறும்.

151 ரயில், 16 பெட்டிகள்
தற்போது கொடுக்கப்பட்டுள்ள request for qualification அறிக்கையில், தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் 151 புதிய ரயில்கள் 12 குழுவாகத் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இது இந்தியாவில் இருக்கும் அனைத்து ரயில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இதேபோல் ஒவ்வொரு ரயிலிலும் 16 பெட்டிகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகப்படியான ரயில் பெட்டிகள் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

160 கிலோமீட்டர் வேகம்
தனியார் முதலீட்டில் தயாரிக்கப்படும் 151 ரயில்களும் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் செல்லும் அளவிற்குத் திறன் வாய்ந்தாக இருக்க வேண்டும் என்று இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்தப் புதிய ரயில் இந்தியாவின் வேகமான ரயிலை விடவும் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.