தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தப் பண்டிகையின் போது விலை மலிவாக உள்ள காரணத்தினால் வேறு ஊரில் பட்டாசு வாங்கி வீட்டிற்கு எடுத்து வருவது பலரின் வழக்கம். ஆனால் இதற்கு எதிராக இந்திய ரயில்வே துறை ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளின் படி அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வோர் பிடிபட்டால் ரயில்வே சட்டத்தின் 164-வது பிரிவின் கீழ் கடுமையான அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படும். 1,000 ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
சில நேரங்களில் சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகிய இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். சிவகாசி போன்ற பகுதிகளில் பட்டாசுகளின் விலை சற்று குறைவாக இருக்கும். எனவே மக்கள் பெரும்பாலானோர் இதுபோன்ற இடங்களில் இருந்து தங்கள் வீட்டிற்கு பட்டாசுகளை கொண்டு வருகின்றனர்.
ஆனால் இந்திய ரயில்வே மூலம் பயணம் செய்பவர்கள் பட்டாசுகளை எடுத்து வரக்கூடாது. இத்தகைய பொருட்களை எடுத்துச் செல்வதால் ஏற்படும் அபாயங்கள் உங்களுடைய சேமிப்பை விட அதிகமாக இருக்கலாம்.
பட்டாசு மட்டுமின்றி, கேஸ் அடுப்புகள், சிலிண்டர்கள், எரியக்கூடிய ரசாயனங்கள், அமிலங்கள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்களையும் ரயில்களில் கொண்டு வர ரயில்வே தடை விதித்துள்ளது. இந்த பொருட்கள் தீ ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சக பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம் அல்லது ரயிலை சேதப்படுத்தலாம் என்பதற்காக இத்தகைய விதிமுறைகளை இந்திய ரயில்வே அமைத்துள்ளது.
பட்டாசு மட்டுமின்றி ஒருவர் குடிபோதையில் பயணம் செய்தாலும் அல்லது ரயிலில் பயணம் செய்யும்போது மது அருந்தினாலும் அதற்கு 6 மாத சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ரயிலில் பயணிக்கும் பொழுது ஒருவர் புகைபிடிக்க அனுமதி கிடையாது. யாரேனும் புகைப் பிடித்து மாட்டிக்கொண்டால் அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இந்திய ரயில்வே சட்டம் 141வது பிரிவின்படி, சரியான காரணமின்றி அவசரச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினால் ஒரு வருட சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும். சில முறை இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications