குறைந்த டிக்கெட் கட்டணத்தில் நீண்ட தொலைவுக்கு சௌகரியமாக பயணம் செய்யலாம் என்பதால் தான் கோடிக்கணக்கான இந்தியர்கள் ரயில்களை விரும்புகின்றனர். தொலைதூர பயணங்களுக்கு சாமானிய மக்கள் தொடங்கி வயதானவர்கள் வரை ரயில்களில் பயணம் செய்யவே விரும்புகின்றனர். இதனால் ரயில் பயண நடைமுறை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவற்றில் கொண்டு வரப்படும் எந்த ஒரு மாற்றமும் கோடிக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காக இந்திய ரயில்வே நெட்வொர்க் திகழ்கிறது. இதில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் டிக்கெட் முன்பதிவு முறை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்திய ரயில்வே பயணிகளுக்கு சிறந்த டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை வழங்குவதற்காக, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் பழைய முன்பதிவு முறையை மாற்றி, புதிய மேம்படுத்தப்பட்ட முன்பதிவு முறையை (Upgraded Passenger Reservation System - PRS) வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அறிமுகம் செய்ய உள்ளது.

1986ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் கடந்த 40 ஆண்டுகளில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டன. தற்போது, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது, நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, ஏஐ வருகை ஆகிய காரணங்களால் Passenger Reservation System முழுவதுமாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் முதல் படிப்படியாக அமலுக்கு வர உள்ளது.
இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், பழைய சிஸ்டத்தில் இருந்து புதிய சிஸ்டத்திற்கு மாறும்போது ரயில் பயணிகளுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படக்கூடாது என கூறியுள்ளார். எனவே அதற்கேற்ற வகையில் மாற்றங்கள் ஒவ்வொன்றாக அமல்படுத்தப்பட உள்ளன.
இந்த நவீன முன்பதிவு அமைப்பின் மிகப்பெரிய சிறப்பம்சமே AI தொழில்நுட்ப பயன்பாடு தான். இதன் மூலம் உங்களது வெயிட்டிங் லிஸ்ட் (Waiting List) டிக்கெட் கன்பார்ம் ஆகுமா ஆகாதா என்பதை மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும். முன்னதாக இதன் துல்லியம் 53% ஆக மட்டுமே இருந்தது, ஆனால் தற்போது இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் 94% துல்லியமாக டிக்கெட் உறுதியாகும் வாய்ப்புகளை பயணிகள் தெரிந்துகொள்ளலாம். அதாவது டிக்கெட் பதிவு செய்துவிட்டு கன்ஃபார்ம் ஆகுமா இல்லையா என நொடிக்கு நொடி செக் செய்ய தேவையில்லை.
தற்போது இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களில் 88% பேர் ஆன்லைன் மூலமாகவே செய்கிறார்கள். நேரடியாக ரயில் நிலைய கவுண்ட்டர்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இந்த புதிய சிஸ்டம் நடைமுறைக்கு வரும் போது ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்னும் எளிமையாகும். டிக்கெட் பதிவு செய்யும் போதே அது உறுதியாகுமா இல்லையா என்பது உறுதியாக நமக்கு தெரிந்துவிடும்.
கடந்த ஆண்டில் தான் இந்திய ரயில்வே 'RailOne' மொபைல் செயலியை அறிமுகம் செய்தது. ரயில்வே சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளையும் ரயில் ஒன் செயலி மூலமே பெற முடியும். இதுவரை 3.5 கோடிக்கும் அதிகமான மக்களால் இது டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் சராசரியாக 9.29 லட்சம் டிக்கெட்டுகள் (முன்பதிவு மற்றும் சாதாரண டிக்கெட்டுகள் உட்பட) புக் செய்யப்படுகின்றன. ஆகஸ்ட் மாதம் முதல் இந்த செயலி இன்னும் நவீனமானதாக மாறும்.


Click it and Unblock the Notifications


