விமான பயணம் மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட அளவு தான் லக்கேஜ் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது பலருக்கும் தெரியும். அதேபோல ட்ரெயினில் பயணம் செய்யும்போதும் எவ்வளவு லக்கேஜ் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன. இந்த விதியை மீறினால் பன்மடங்கு அபராதம் செலுத்த வேண்டி வரலாம். ட்ரெயின் தானே எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என நம்மில் பலர் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்திய ரயில்வே எவ்வளவு லக்கேஜ் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு சில விதிகளை வகுத்துள்ளது. அனுமதியை மீறி அதிக எடை கொண்ட லக்கேஜை எடுத்துச் சென்றால் வேறு வழியே இல்லை, அவர்கள் சொல்லும் அபராதத்தை செலுத்தி விட்டு தான் இறங்க வேண்டி வரும். எனவே நீங்கள் இனி வரும் நாட்களில் ட்ரெயினில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால் இந்த முக்கியமான தகவல் தெரிந்து கொண்டு பயணம் செய்யுங்கள்.
இந்திய ரயில்வே, பயணிகள் எடுத்துச் செல்லும் லக்கேஜை 3 முக்கிய பிரிவுகளாக வகுத்துள்ளது.
ஃப்ரீ அலோவென்ஸ்: முதலாவதாக ஃப்ரீ அலோவென்ஸ் என்று சொல்லப்படுகிற இலவச வரம்பு. உங்கள் டிக்கெட் கிளாஸ் என்ன என்பதற்கு ஏற்ப நீங்கள் குறிப்பிட்ட எடை கொண்ட லக்கேஜை எந்தவித கட்டணமும் இன்றி எடுத்துச் செல்லலாம்.
மார்ஜினல் அலோவென்ஸ்: மார்ஜினல் அலோவென்ஸ் என்பது கூடுதல் லக்கேஜ் அனுமதி. அதாவது மேலே கூறப்பட்டுள்ள இலவச வரம்பை விட சற்று அதிகமான எடை கொண்ட லக்கேஜை ரயில்வே கூறும் சிறு கட்டணத்தைச் செலுத்தி கொண்டு செல்லலாம். ஆனால் இதை அபராதமாக கணக்கிட முடியாது.
அதிகபட்ச வரம்பு: இதை தான் மேக்ஸிமம் லிமிட் என்று கூறுவார்கள். ரயில்வே சொன்ன குறிப்பிட்ட லக்கேஜ் அளவுக்கு மேல் எடை கொண்ட பொருட்களை எடுத்துச் சென்றால் நீங்கள் எங்கே அமர்கிறீர்களோ அந்த கோச்சிற்க்கு எடுத்துச் செல்ல முடியாது. அதை ஏற்றி செல்ல லக்கேஜ் வேன் அல்லது பார்சல் ஆபீஸில் முன்பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு அவர்கள் லக்கேஜை அனுப்பி விடுவார்கள்.
எவ்வளவு லக்கேஜ் எடுத்து செல்கிறோம் என்பதைப் போலவே எந்த அளவு லக்கேஜை எடுத்து செல்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். உங்கள் லக்கேஜின் எடை குறைவாகவே இருந்தாலும் அதன் அளவை சரியாக கவனிக்கத் தவறினால் அதற்கும் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி வரலாம்.
அதிகபட்சமாக உங்களுடைய லக்கேஜ் சைஸ் 100 சென்டிமீட்டர் X 60 சென்டிமீட்டர் X 25 சென்டிமீட்டராக இருக்க வேண்டும். இதை தாண்டி உங்கள் லக்கேஜ் இருந்தால் அதை பார்சல் அலுவலகம் எங்கிருக்கிறதோ அங்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும். இவற்றை முறைப்படி பார்சல் அலுவலகத்தில் மட்டுமே அனுப்ப இயலும். பல மடங்கு அபராதம் செலுத்துவதை விட பார்சல் அலுவலகத்திற்கு சென்று முன்பதிவு செய்யும்போது கட்டணம் சற்று குறைவாகவே இருக்கும்.

6 மடங்கு அபராதம்: ஒருவேளை டிக்கெட் செக்கர் சோதனை செய்யும் போது நீங்கள் எந்த வித அனுமதியும் இல்லாமல் கூடுதலாக பெரிய அளவில் லக்கேஜ் கொண்டு செல்வது தெரிய வந்தால் எப்பொழுதும் விதிக்கப்படும் கட்டணத்தை விட சுமார் 6 மடங்கு அதிகமான அபராதத்தைச் செலுத்த வேண்டி வரலாம்.
உதாரணமாக நீங்கள் அமர்ந்திருக்கும் கோச்சில் லக்கேஜ் கட்டணம் 100 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அதில் நீங்கள் அதிக எடை கொண்ட லக்கேஜை ஏற்றினாலோ அல்லது பெரிய அளவில் இருக்கும் லக்கேஜ்ஜை ஏற்றினாலோ அதற்கு 6 மடங்கு அதிகமாக சுமார் 600 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டி வரலாம்.
| கிளாஸ் | இலவச வரம்பு (Free Allowance) | அதிகபட்ச வரம்பு (Maximum Limit) |
|---|---|---|
| ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ் | 70 கிலோ | 150 கிலோ |
| ஏசி 2-டயர் | 50 கிலோ | 100 கிலோ |
| ஏசி 3-டயர் | 40 கிலோ | 80 கிலோ |
| ஸ்லீப்பர் கிளாஸ் | 40 கிலோ | 80 கிலோ |
| ஜெனரல் கிளாஸ் | 35 கிலோ | 70 கிலோ |


Click it and Unblock the Notifications