இந்தியர்களுக்கு பிடித்தமான போக்குவரத்து முறை என்றால் அது ரயில் பயணம் தான். மலிவான கட்டணம், வசதியான இருக்கைகள்.. இதுவே பலர் ரயில் பயணத்தை தேர்ந்தெடுப்பதற்கு காரணமாக உள்ளது. இந்திய ரயில்வே பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல வசதிகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு பயணியும் தங்களுடைய சொந்த லக்கேஜ்ஜை எடுத்துச் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. கன்ஃபார்ம்டு டிக்கெட் வைத்துள்ள பயணிகள் இனி இந்த வசதியை பயன்படுத்தலாம்.
இந்திய ரயில்வே அறிமுகம் செய்த புதிய வசதி என்ன?: இதற்கு முன்பு வரை பயணிகளிடம் அதிகமான லக்கேஜ் இருந்தால் ஸ்டேஷனில் முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் இனி கன்ஃபார்ம்டு டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் தங்களுடனே லக்கேஜையும் எடுத்துச் செல்லலாம்.

அதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை இந்திய ரயில்வே 2026-ஆம் ஆண்டின் ஜூலை 31-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. பயணிகளுக்கு சிரமமில்லாத அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டண விபரங்கள்: கன்ஃபார்ம்டு டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் தாங்கள் பயணிக்கும் வகுப்பிற்கு ஏற்ப இலவசமாக லக்கேஜை எடுத்துச் செல்லலாம். இதைத் தாண்டி எடுத்துச் செல்லும் பட்சத்தில் அதற்கு தனி கட்டணம் பொருந்தும்.
ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏசியில் பயணித்தால் 70 கிலோ வரையிலான லக்கேஜ்ஜை இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஃபர்ஸ்ட் கிளாஸ் மற்றும் செகண்ட் கிளாஸ் ஏசியில் பயணித்தால் 50 கிலோ வரையிலான லக்கேஜை எடுத்துச் செல்ல முடியும். தேர்டு ஏசியில் பயணம் செய்பவர்களுக்கு 40 கிலோ வரை அனுமதி உண்டு. ஏசி சேர் கார் மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் போன்றவற்றில் பயணித்தால் 35 கிலோ வரை இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
கூடுதல் லக்கேஜ் கட்டணம்: இந்த வரம்பை தாண்டி லக்கேஜை எடுத்துச் செல்லும் பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து எடுத்துச் செல்லலாம். ஆனால் அதற்கு எப்பொழுதும் விதிக்கப்படும் லக்கேஜ் கட்டணத்தை விட 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி சேர் கார் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச வரம்பை தாண்டி லக்கேஜ் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
லக்கேஜின் அளவு: இந்திய ரயில்வே எவ்வளவு லக்கேஜ் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு விதிகளை வகுத்திருப்பது போல.. எந்த அளவில் லக்கேஜ் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கும் சில விதிகளை வகுத்துள்ளது. அந்த வகையில் அதிகபட்சமாக 100 சென்டிமீட்டர் நீளம், 60 சென்டிமீட்டர் அகலம், 25 சென்டிமீட்டர் உயரம் கொண்ட லக்கேஜை எடுத்துச் செல்லலாம்.
இந்த அளவைத் தாண்டி உங்களுடைய லக்கேஜ் இருந்தால் அதை நீங்கள் பயணம் செய்யும் கோச்சில் வைத்திருக்க முடியாது. தனியாக அதற்கான சரக்கு ரயிலில் முன்பதிவு செய்து அனுப்ப வேண்டும். அதேபோல வியாபார நோக்கத்திற்காக லக்கேஜ் எடுத்து செல்பவர்களுக்கும் பயணிகள் பெட்டியில் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. அதற்கும் சரக்கு ரயிலைத் தான் பயன்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications
