இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் வேளையில் டிசம்பர் 2ஆம் தேதி வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 90.02 என்ற புதிய வரலாற்று சரிவை பதிவு செய்தது. இதன் மூலம் இந்திய ரூபாய் ஆசியாவில் மிகவும் பலவீனமான நாணயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்திய ரூபா் மதிப்பு 2025ஆம் ஆண்டில் இதுவரையில் 5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
ரூபாய் மதிப்பு சரிவும், டாலர் மதிப்பு உயர்வும் ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் தரலாம் என்றாலும், இறக்குமதியாளர்களுக்கு செலவை அதிகரிக்கும். இது சாமானிய மக்களுக்கு இது பெட்ரோல், டீசல் முதல் பல்வேறு இறக்குமதி பொருட்கள் விலையில் நேரடியாக தாக்கத்தை ஏற்றத்தலாம். ரூபாய் மதிப்பின் தொடர் சரிவுக்கு என்ன காரணம்..?

வர்த்தக பற்றாக்குறை:
இந்தியாவின் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் 12 சதவீதம் குறைந்து 34.38 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 17 சதவீதம் உயர்ந்து 76.06 பில்லியன் டாலராகவும் இருந்தது. இதனால் நாட்டின் மொத்த வர்த்தக பற்றாக்குறை 41.68 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகமாக இருக்கும் காரணத்தால் டாலர் தேவையை அதிகரித்து ரூபாய் மதிப்பை பலவீனப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா-இந்திய வர்த்தக ஒப்பந்தம்:
அமெரிக்கா-இந்தியா மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் ஏற்படும் தாமதமும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்திய ஏற்றுமதிக்கு கடுமையான வரிகளை விதித்துள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதிகள் அமெரிக்காவுக்கு குறைந்துள்ளது.
HSBC ஆய்வின்படி, நவம்பரில் இந்திய உற்பத்தித் துறை வளர்ச்சி 9 மாதங்களில் மிகவும் குறைவான அளவுக்கு வந்ததுள்ளது. இதுவை அனைத்தும் ரூபாய் மதிப்பு மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை:
இதற்கிடையில் இந்திய அன்னிய செலாவணியில் முக்கிய பங்கு வகிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPI) 2025-ல் இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து சுமார் 1.47 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்று, முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.
NSDL தரவின்படி அன்னிய முதலீட்டாளர்களின் முதலீட்டு வெளியேற்றம் ரூபாய் மதிப்பு சரிவுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது என தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2025-ல் டாலர்:
டிசம்பர் 2025-ல் அமெரிக்க டாலர் பலவீனமடையலாம் என்று கணிக்கப்படுகிறது. ஃபெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பு இருக்கும் என்று முதலீட்டு சந்தை எதிர்பார்க்கிறது. டாலர் இன்டெக்ஸ் (DXY) டிசம்பர் 1 அன்று 99.1765-ஆக சரிந்தது. யூரோ, பவுண்ட், யென் போன்றவற்றுக்கு எதிராக டாலர் பலவீனமாக இருந்தது. ஆனால் உலக அளவில் ரிஸ்க் அதிகரித்தால் டாலர் மீண்டும் வலுவடையலாம் என கலவையான கணிப்பும் உள்ளது.
ரூபாய் எதிர்காலம்:
2025 இறுதியில் இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 88 முதல் 90 வரையில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. நவம்பரில் டாலர் மதிப்பு பெரும் ஏற்றம் கண்டது. ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்துவதில் ஆர்பிஐ-யின் தலையீடு இருந்தாலும், வர்த்தக ஒப்பந்த தாமதம், FPI விற்பனை காரணமாக சரிவு தொடர்ந்து வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 90.02 என்ற புதிய சரிவைத் தொட்டுள்ளது.


Click it and Unblock the Notifications