இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாற்றில் குறைவான அளவை பதிவு செய்து இந்தியப் பொருளாதார வல்லுனர்களை பீதி அடையச் செய்துள்ளது. அக்டோபர் 11 அன்று, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 84 என்ற அளவைக் கடந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 12 பைசுகள் சரிந்து 84.0975 என்ற புதிய குறைந்த அளவை இந்திய ரூபாய் மதிப்பு எட்டியது. இந்த சரிவுக்கு முக்கிய காரணங்கள் இரண்டு: வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிதி வெளியேற்றம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் மத்தியில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.
இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (FPIs) பங்குச்சந்தையில் அதிகப்படியான பங்குகளை விற்பனையை மேற்கொண்டு வருவதால், டாலருக்கு தேவை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ரூபாய் பலவீனமடைந்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்போது அவர்கள் டாலர்களை கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்கள் முதலீட்டை திரும்பப் பெறும்போது, அவர்கள் டாலர்களை இந்திய சந்தையிலிருந்து வெளியே எடுத்துச் செல்கிறார்கள். இந்த வெளியேற்றம் தான் இந்தியாவில் டாலர்களுக்கான தேவையை அதிகரித்து, ரூபாயை விட அதன் மதிப்பை உயர்த்துகிறது.
வெளிநாட்டுப் பங்குதாரர்கள் கடந்த ஒன்பது நாட்களில் மட்டும் இந்தியப் பங்குச் சந்தையில் 55,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர், கிட்டத்தட்ட தினமும் சுமார் 1 பில்லியன் டாலர்கள் அளவிலான பங்குகளை விற்பனை செய்து டாலர் முதலீட்டைத் திரும்பப் பெறுகிறார்கள். இந்த போக்கு தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ரூபாயை இன்னும் சரிவடையச் செய்து, குறுகிய காலத்தில் 84.25 வரை தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான்-இஸ்ரேல்-லெபனான் பிரச்சனை தொடர்ந்து நீடிப்பதும் மூலம் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி ரூபாயை பலவீனப்படுத்தி வருகிறது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை செப்டம்பர் 30 அன்று சுமார் 69 டாலரிலிருந்து இப்போது 78.92 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
சீனாவில் வட்டி விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் குறைப்பு மற்றும் 50 அடிப்படை புள்ளிகள் பண இருப்பு விகிதக் குறைப்பு ஆகியவை முதலீட்டுச் சந்தையின் போக்கை மாற்றியுள்ளது. குறிப்பாக 140 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனா-வின் பொருளாதார ஊக்கத் திட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சீன பங்குச் சந்தைகளுக்கு நகர்த்துவதற்கு முக்கியமான காரணமாகிறது.
சீனா சனிக்கிழமை தனது பொருளாதாரத்தை மேம்படுத்தத் தனது அப்டேட் செய்யப்பட்ட 2 டிரில்லியன் யுவான் ($283 பில்லியன்) புதிய நிதி உத்தரவாத திட்டத்தை வெளியிடலாம் என்று ஒரு சந்தை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனால் இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து கூடுதல் முதலீடுகள் வெளியேறும் வாய்ப்பு அதிகமாக இருப்பது மட்டும் அல்லாமல் பங்குச்சந்தையும் அதிகளவில் சரியும் வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications