மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் போர் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் தீவிரமாக பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய், எரிவாயு ஆகிய இரண்டுக்கும் வெளிநாட்டு ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியாவுக்கு இந்த போரும், போர் மூலம் உருவாகியிருக்கும் எரிபொருள் சப்ளை செயின் பாதிப்பும் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சரிந்து புதிய குறைந்த நிலையை எட்டியது. இந்திய ரூபாய் மதிப்பு 92 என்ற மோசமான அளவை கடந்து 93 அளவை தொட்டு தற்போது 93.37 ரூபாய் என்ற படுமோசமான நிலைக்கு வந்துள்ளது.
இதற்கு முன் இந்திய ரூபாயின் குறைந்தபட்ச அளவாக 92.63 என்ற நிலை இருந்தது, தற்போது மொத்தமாக சரிந்து 93.37 ஆக குறைந்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதியில் உருவான போர் சூழ்நிலை, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை பாதித்துள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஒரு பேரலுக்கு $120 வரை சென்ற எண்ணெய் விலை, உலக பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த உயர்வு இந்தியாவைப் போன்ற எண்ணெய் மற்றும் ஏரிவாயு இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பணவீக்கம் அதிகரிக்கும் அபாயத்தையும், ஜிடிபி வளர்ச்சியை மந்தமாகும் சூழ்நிலையையும் உருவாக்குகிறது. இதோடு இந்திய சந்தையில் இருந்து முதலீட்டை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றி வருகின்றனர். இதன் காரணமாகவும் இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து ரூபாய் மதிப்பு சுமார் 2% வரை குறைந்துள்ளது. இந்த காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் இருந்து 8 பில்லியன் டாலருக்கும் மேல் பணத்தை வெளியேறியுள்ளது. இது ஜனவரி 2025க்கு பிறகு காணப்படும் மிகப்பெரிய மாதாந்திர முதலீட்டு வெளியேற்றமாகும்.
Strait of Hormuz வழியாக எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் இணைந்து நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளன. அதேபோல், அமெரிக்காவும் எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கும் முயற்சிகளை அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டாலும், உடனடி தீர்வு கிடைப்பது சாத்தியமில்லை என நிபுணர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications