இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 6 மாத காலத்தில் மட்டும் 11,250 பேரை வேலையில் இருந்து நீக்கி இருப்பது தெரியவந்துள்ளது. லாங் ஹவுஸ் கன்சல்டிங் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளில் இந்தியாவில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எத்தனை பேரை வேலையில் இருந்து நீக்கின என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில அதாவது ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 21,000 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளன. அதுவே 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் 15,000 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு இருந்தனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது ஓரளவு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் மட்டும் இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 11,250 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளன.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் குறைந்திருக்கிறது, என்றாலும் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதும் குறைந்துள்ளது. ஏனெனில் உரிய நிதி கிடைக்காமல் நிறுவனங்கள் தவிப்பது தெரிய வந்துள்ளது. சில நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு செய்வதற்காக முயற்சி செய்து வருகின்றன.
சில நிறுவனங்களுக்கு எதிர்பார்த்த அளவிலான நிதி கிடைக்கவில்லை என்பன உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக லாங் ஹவுஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அன்சுமான் தாஸ் தெரிவிக்கிறார். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களை நீக்குவது குறைந்து புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதையும் குறைத்துக் கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார் . 2021- 22 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிதாக ஆட்களை வேலைக்கு சேர்ப்பது 40 சதவிகிதம் வரை குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டில் 4,000 பேரை வேலையில் இருந்து நீக்கின. இது 2022 ஆம் ஆண்டில் 20,000 என அதிகரித்தது 2023இல் 36,000 என உயர்ந்தது. நடப்பு ஆண்டில் இது குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. குறிப்பாக ஓலா எலெக்ட்ரிக், பேடிஎம் , பை ஜூஸ், அன்அகாடமி ,ஸ்விக்கி, பிளிப்கார்ட் உள்ளிட்டவை தான் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications