படித்த இளைஞர்கள் இன்று பல்வேறு தொழில் செய்து வருகின்றனர் என்றும் அதன் மூலம் அவர்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு படிக்க சென்ற இந்திய இளைஞர் ஒருவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அந்நாட்டில் டீ கடை வைத்துள்ளார்.
அந்த டீக்கடை மூலம் அவர் மில்லியன் கணக்கில் சம்பாதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிபிஏ படிப்பு
ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பிபிஏ என்று கூறப்படும் வணிகத்தில் இளங்கலைப் படிப்பு படிப்பதற்காக இந்தியாவை சேர்ந்த சஞ்சித் என்பவர் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு அவர் திடீரென படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு 'டிராப்அவுட் சாய்வாலா' என்ற டீக்கடையை நிறுவி உள்ளார்.
டீக்கடை
ஒரு டீக்கடை அமைப்பது என்பது இந்தியாவில் சாதாரண விஷயம் என்றாலும் ஆஸ்திரேலியாவில் டீக்கடை ஆரம்பிக்க துணிச்சலான நடவடிக்கை தேவையாக இருந்தது. ஏனெனில் அவர் டீக்கடை ஆரம்பித்த மெல்போர்ன் நகரம் டீ, காபிக்கு மிகவும் புகழ்பெற்ற நகரம் என்பதால் சுவை, தரம் மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும்.
டிராப்அவுட் சாய்வாலா'
இந்தநிலையில் மெல்போர்னில் சஞ்சித் ஆரம்பித்த 'டிராப்அவுட் சாய்வாலா' டீக்கடை அந்நாட்டு மக்களை மிக விரைவில் கவர்ந்துள்ளது. இதனால் அவருக்கு நன்றாக வியாபாரம் ஆகியது. இந்த நிலையில் அவர் தற்போது ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5.2 கோடி சம்பாதித்து உள்ளதாக தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஊழியர்கள்
சஞ்சித் தனது 'டிராப்அவுட் சாய்வாலா' டீக்கடைக்கு இந்தியாவில் இருந்து ஊழியர்களை வரவழைத்து உள்ளார் என்பதும் ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் சிலரையும் வேலைக்கு அமர்த்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்களுக்கு பகுதிநேர வேலையாக வருமானத்துக்கு அவர் இதன்மூலம் வழிவகை செய்துள்ளார் என்பதும் தான் படிக்காத படிப்பை அனைவரும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை தருகிறார் என்றும் கூறப்படுகிறது.
பெற்றோர் பெருமிதம்
படிப்பை பாதியில் விட்டுவிட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியதால் எனது பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் நான் டீ கடை ஆரம்பித்து தற்போது மில்லியன் கணக்கில் சம்பாதித்து வருவதை பார்த்து அவர்கள் உண்மையில் பெருமைப்படுகிறார்கள் என்று பேட்டி ஒன்றில் சஞ்சித் தெரிவித்துள்ளார்.
அறிவுரை
மேலும் என்னை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு யாரும் படிப்பை பாதியில் விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் படிப்பு என்பது ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய சொத்து என்றும் படிப்பை முடித்த பின்னர் வேலைக்கு செல்வதா? அல்லது சொந்தத் தொழில் ஆரம்பிப்பதா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் இன்றைய இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications