தற்போது வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் சூழல்தான் நிலவுகிறது. சமீபத்தில் கூட 1 லட்சம் பேரை டெக் நிறுவனங்களிலிருந்து பணிநீக்கம் செய்ய இருப்பதாக முன்னணி IT நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன் அடுத்தகட்டமாக கனடாவில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் உணவகத்தில் வேலைக்கு சேர்வதற்காக இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நேர்காணலுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் விரைவாக பரவிய இந்தக் காட்சி கனடாவில் படிக்கவோ அல்லது பணிபுரியவோ சிந்தித்து கொண்டிருக்கும் பலருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவகத்தில் வழங்கப்படும் வெயிட்டர் மற்றும் சர்வீஸ் ஸ்டாப்களுக்கான நேர்காணல் தான் இது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் போக்கை இது சுட்டிக்காட்டுகிறது.

வரிசையில் காத்திருந்த மாணவர்களில் ஒருவரான அகம்வீர் சிங், "நான் மதியம் 12 மணியளவில் இங்கு வந்தேன், வரிசை மிகவும் பெரியதாக இருந்தது. நாங்கள் இணையத்தில் விண்ணப்பத்தை சமர்பித்தோம், அதன் பின் நேர்காணல் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, இங்கு வேலை வாய்ப்புகள் இருப்பதாக நான் நம்பவில்லை என்று கூறியுள்ளார்.
இன்னொரு மாணவர் கூறுகையில், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. வேலை தேடும் யாருக்குமே சரியான வேலை கிடைக்கவில்லை. எனது நண்பர்களில் பலர் இப்போது வேலை இல்லாமல் உள்ளனர். அவர்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளாக இங்கே தான் இருக்கிறார்கள். கனடாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு வேலை தேடுவதில் இதே போன்ற போராட்ட அனுபவங்களை பலர் எதிர்கொண்டுள்ளனர். எனவே இந்த ஏமாற்ற உணர்வு புதிதல்ல என்று கூறியுள்ளார்.
கனடாவில் வேலை வாய்ப்புக்காக நீண்ட வரிசையில் இந்தியர்கள் நிற்பது போன்ற வீடியோ சமூக ஊடக தளமான X-இல் @MeghUpdates என்ற கணக்கு மூலம் பகிரப்பட்டது. இது மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் யதார்த்தத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் இருந்து கனடாவுக்கு தங்கள் கனவுகளுடன் வெளியேறும் மாணவர்கள் தீவிர விசாரணை செய்த பிறகு தான் செல்ல வேண்டும் என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ போஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோவுக்கு பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகின்றன. அதில் ஒரு பயனர் "இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு மாணவர்களை பார்ப்பது வருத்தமாக உள்ளது" என்று கூறியிருந்தார். மற்றொரு எக்ஸ் பயனர் வருங்கால மாணவர்கள் தங்கள் விருப்பங்களை செய்வதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்க வேண்டிய நேரம் இது என்று கருத்து தெரிவித்தார்.
வேலைக்காக வெளிநாடு செல்ல இருக்கும் மாணவர்கள் முன்பே யோசித்து, செல்ல இருக்கும் நாட்டில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். சிலர் வெளிநாடுகளுக்கு சென்று ரூம் எடுத்து தங்கி அதன் பின்பு வேலையை தேடுகின்றனர். அதற்கு மாறாக இந்தியாவில் இருக்கும் போதே வேலை வாய்ப்புகள் குறித்து தெரிந்து கொண்டு சென்றால் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications