அமெரிக்காவில் முறைகேடாக தங்கி இருந்த 104 இந்தியர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் அமெரிக்காவில் தங்கி இருக்கும் மாணவர்களிடம் அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவில் மாணவர் விசாவில் தங்கி இருப்பவர்களிடம் காவல்துறையினர் அண்மை காலமாக அடிக்கடி ஆய்வு நடத்துகிறார்களாம். குறிப்பாக மாணவர்களின் அடையாள அட்டை மற்றும் அவர்கள் அமெரிக்காவில் தங்கி இருப்பதற்கான உரிமம் ஆகியவற்றை காட்ட வேண்டும் என கூறுகிறார்களாம்.

பொதுவாக அமெரிக்காவில் படிப்பிற்காக செல்பவர்களுக்கு மாணவர் விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவில் இருக்கக்கூடிய மாணவர்கள் படிப்பு போக வாரத்தில் 20 மணி நேரம் வேலை செய்யலாம் என அனுமதி வழங்கப்படுகிறது. எனவே அமெரிக்காவிற்கு படிப்புக்காக செல்லக்கூடிய மாணவர்கள் உள்ளூர் மளிகை கடைகள் ,பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் பகுதி நேரமாக வேலை செய்வார்கள். இவர்கள் அதிக பணம் ஈட்ட வேண்டும் என்பதற்காக அரசு குறிப்பிட்டுள்ள நேரத்தை கடந்தும் வேலை செய்கிறார்களாம்.
இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமெரிக்க காவல்துறையினர் மற்றும் பிற குடியுரிமை துறை அதிகாரிகள் இதுபோன்ற மளிகை கடை, பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் உணவகங்களில் அடிக்கடி வெளிநாட்டு மாணவர்களிடம் ஆய்வு நடத்துகிறார்கள்.
இந்த ஆய்வு காரணமாக தாங்கள் மீண்டும் தாயகத்திற்கே அனுப்பப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் பல்வேறு இந்திய மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. சிலர் உள்ளூர் காவல்துறையினரால் தாங்கள் விசாரிக்கப்பட்டதாகவும் ஒரு சிலர் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் மற்றும் அமெரிக்க எல்லை பாதுகாப்பு துறையினர் தங்களிடம் விசாரணை நடத்தியதாகவும் தங்களுடைய ஆவணங்களை பரிசோதனை செய்து பார்த்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு இப்படி தீவிர ஆய்வுகளோ பரிசோதனைகளோ நடந்தது கிடையாது என கூறுகின்றனர். கடந்த வாரம் தான் பணிபுரிந்த உணவகத்திற்கு வந்து அமெரிக்க காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகவும் இதனால் அச்சத்தில் தான் வேலையை விட்டு விட்டதாகவும் ஒரு மாணவர் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தான் பெட்ரோல் நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் தன்னிடம் ஆவணங்களை கேட்டு பரிசோதனை செய்ததாக ஒரு மாணவர் கூறியுள்ளார்.
இதனிடையே அமெரிக்காவில் மாணவர் விசாவில் சென்றிருப்பவர்கள் அரசின் நடவடிக்கையிலிருந்து தப்ப வேண்டும் என்றால் அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது என நிபுணர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
அமெரிக்கா அரசு வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் முறைகேடாக தங்கி இருப்பது மற்றும் வேலை செய்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் அவர்களுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தந்து விடக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த ஆய்வு மற்றும் பரிசோதனை இன்னும் அதிகரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications