பிராம்ப்டன்: வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டில் செட்டிலாக வேண்டும் என விரும்பும் இந்தியர்களின் முதன்மையான தேர்வாக இருக்கும் நாடு கனடா. ஆனால் அங்கே இந்தியர்கள் வேலை தேடி அலைமோதும் ஒரு வீடியோ வெளியாகி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கனடா நாட்டில் ஹோட்டலில் வெயிட்டர் மற்றும் சர்வர் வேலைகளுக்கு இந்தியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் Tandoori Flame என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கே வெயிட்டர் மற்றும் சர்வர் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டது.

இதனை அடுத்து 3,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த வேலைக்காக விண்ணப்பித்து உணவு விடுதியில் முன்பு குவிந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்த இளைஞர்கள் என சொல்லப்படுகிறது.
இந்த வேலை தேடி வந்த அகம்பர் சிங் என்ற இந்திய மாணவர் ஆன்லைன் விளம்பரம் வழியாக இந்த வேலை வாய்ப்பு குறித்து அறிந்து கொண்டதாகவும் தற்போது நேர்காணலுக்காக இங்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கனடாவில் தற்போது நிலைமை மோசம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ள மற்றொரு மாணவர் இங்கே தேடி வரும் வேலை வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை என்னுடைய பெரும்பாலான நண்பர்கள் தற்போது வேலை இல்லாமல் இருக்கிறார்கள், அவர்கள் இரண்டு மூன்று ஆண்டுகளாக கனடாவில் வேலை கிடைக்காமல் இப்படி கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
தற்போது கனடாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. எனவே பெரும் கனவோடு கனடாவை நோக்கி வரக்கூடிய இந்தியர்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தங்களது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என ஒரு பயனர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி லட்சக்கணக்கானவர்களின் பார்வையை பெற்றுள்ளது.
இந்திய பிள்ளைகள் அவர்களது வீட்டில் உணவு சமைப்பதற்கு அல்லது பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள் ஆனால் வெளிநாட்டில் வந்து இப்படி வேலை தேடி ஹோட்டல் ஹோட்டலாக சென்று வருகிறார்கள் என ஒரு பயனர் கூறியுள்ளார்.
கடந்த மாதத்தில் தான் கனடா அரசு தங்களுடைய குடியுரிமைக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வந்தது. அதாவது வெளிநாட்டு மாணவர்கள் வருகையை குறைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.
இதன்படி 2025 ஆம் ஆண்டு முதல் கனடா வெளிநாட்டு மாணவர்களுக்கான உரிமங்களை வழங்குவதை 10% வரை குறைக்கும் எனக் கூறியிருந்தது. கனடாவில் கல்வி மற்றும் வேலைக்காக வருகை தரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, இதனால் கனடா மக்களுக்கு வேலைவாய்ப்பின்மை, வீட்டு வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் எழுந்ததால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications