இந்தியாவில் முன்னணி டெக் நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ், விப்ரோ, இன்போசிஸ் போன்றவை 2023-24 நிதியாண்டில் பெருமளவு ஆட்குறைப்பை செய்தன.
இதைத் தொடர்ந்து சிலிக்கான் வேலியில் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரு நிறுவனங்களும் பெரிய அளவில் ஆட்குறைப்பை செய்தன. இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலையை இழந்தனர்.

பொருளாதார மந்தநிலை, ஆட்டோமேஷன், சிக்கன நடவடிக்கை போன்ற பல காரணங்கள் இந்த ஆட்குறைப்புக்கு பின்னணியாகக் கூறப்பட்டது.
நிறைய நிறுவனங்கள் பகிரங்கமாக ஆட்குறைப்பை செய்தாலும் இந்தியாவில் உள்ள முன்னணி டெக் நிறுவனங்கள் கமுக்கமாக ஆட்குறைப்பை செய்து வருகின்றன. தேவையில்லை என்று கருதப்படும் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர் அல்லது ராஜிநாமா செய்வதற்கு அழுத்தம் தரப்பட்டனர்.
ஆல் இந்திய ஐடி அண்டு டெக் எம்ப்லாயீஸ் யூனியன் மதிப்பின் படி 20,000 டெக் நிபுணர்கள் இதுபோன்ற கமுக்கமான ஆட்குறைப்பினால் வேலை இழந்தனர் எனக் கூறப்படுகிறது.
ஆட்குறைப்பு செய்வதற்கு முன்பாக தங்கள் நிறுவனத்திலேயே வேறு சிறிய வேலைகள் இருந்தால் அதைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்பு தரப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆகியுள்ளனர்.
ஆட்குறைப்போடு பல நிறுவனங்கள் தங்களது அலுவலக நேரத்தை 10 முதல் 12 மணி நேரம் என்பதை 14 முதல் 16 மணிநேரமாக அதிகரித்து விட்டன. இதனாலும் ஊழியர்கள் கடும் நெருக்கடியை சந்திக்கின்றனர்.
இதுதவிர ஊழியர்கள் எதிர்கொள்ள முடியாத அளவு வேலைச் சுமையை நிறுவனங்கள் சுமத்துவதாகும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இதுபோன்ற நடவடிக்கைகளால் ஊழியர்கள் தாங்களாகவே வேலையில் இருந்து விலகி விடுகின்றனர் என்று கூறப்படுகிறது. இதுபோன்று பொருளாதார மந்தநிலையைக் காட்டி பல நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் மிகக் கடுமையான ஆட்குறைப்பை செய்யும் நிலை தொடர்கிறது.
2023 நிதியாண்டில் பல நெருக்கடிகளை நிறுவனங்களா் சந்தித்தபோது இப்படி ஆட்குறைப்பு செய்யப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை தேறி வந்தநிலையிலும் தொடர்ந்து ஆட்குறைப்பை நிறுவனங்கள் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பல நிறுவனங்கள் தங்களது லாபத்தை அதிகரிப்பதற்காக ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாகவும் கூறப்படுகிறது. ஆட்குறைப்பு பற்றி ஊழியர்கள் சங்கங்கள் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதனால் எந்தவித பலனும் இல்லை எனத் தெரிகிறது.
இதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை தலையிட்டு தீர்வு காணப்படவேண்டும் என்று ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications