என்னதான் இந்தியா மார்டனாக மாறினாலும், இன்னும் 10ல் 8 திருமணங்கள் குடும்பத்தால் நிச்சயக்கப்பட்ட திருமணம் தான். ஆமாங்க பசங்க அமெரிக்காவில் வேலை பார்த்தாலும், அப்பா அம்மாக்கள் இங்கிலீஷ் பேசினாலும் இந்தியாவில் குடும்பத்தால் நிச்சயக்கப்பட்ட திருமணம் தான் அதிகளவில் நடக்கிறது.
இதற்கு ஏற்றார்போல் இன்றைய மக்களின் தேவையைப் புரிந்துகொண்டு மேட்ரிமோனி நிறுவனங்கள் பெண் பார்க்கும் படத்தில் இருந்து திருமணம் வரையில் அனைத்தையும் ஆன்லைனிலேயே நடத்த பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
அப்படி என்ன சேவை..?? வாங்கப் பார்ப்போம்

கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமான காரணத்தால் திருமணங்களின் எண்ணிக்கையும், திருமணத்தைச் சுற்றி நடக்கும் வியாபாரம் அனைத்தும் குறைந்துள்ளது.
இந்நிலையில் பார்த் மேட்ரிமோனி , ஜீவன்ஷாதி.காம், ஷாதி.காம் நிறுவனங்கள் கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பைச் சமாளிக்கவும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு புதிய சேவைகளை அறிமுகம் செய்ய மக்களுக்குத் திருமணத்திற்காக வரன் பார்க்கும் சேவையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

புதிய சேவை
பல வருடங்களாகவே மக்கள் ஆன்லைன் மேட்ரிமோனி யில் திருமணத்திற்காக வரன் தேடும் பழக்கத்திற்கு வந்த நிலையில், தற்போது வரன் பார்க்கும் படலத்தை வீடியோ கால் வாயிலாகவும், திருமணத்தை ஜூம் கால் வாயிலாக நடத்தும் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

ஷாதி மீட்
ஒரு வரன் பிடித்துவிட்டால் இப்போது இரு வீட்டாரும் முதல் வீடியோ கால் வாயிலாகச் சந்தித்துக் கொண்டு பேச, ஷாதி.காம், ஷாதி மீட் என்னும் புதிய வீடியோ கான்பரன்ஸ் சேவை அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் சேவை ஜூன் 19ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 2 நாட்களில் சுமார் 1,05,000 பேர் இந்தச் சேவையைப் பயன்படுத்தியுள்ளதாக ஷாதி.காம் தெரிவித்துள்ளது.

ஜீவன்ஷாதி.காம்
ஷாதி.காம் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஜீவன்ஷாதி.காம் கொரோனாக்கு முன்பே இத்தகைய வீடியோ கான்பரன்ஸ் சேவையை அறிமுகம் செய்த நிலையில் இந்த 11 வார கொரோனா காலத்தில் ஜீவன்ஷாதி.காம் வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையை அதிகளவில் பயன்படுத்தியுள்ளதாக ஜீவன்ஷாதி.காம் தெரிவித்துள்ளது.
கொரோனாக்கு முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் இச்சேவைப் பயன்பாட்டின் அளவு 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

பார்த் மேட்ரிமோனி
இதேபோல் பார்த் மேட்ரிமோனி இதேபோன்ற சேவையை ஜூன் 18ஆம் தேதி தனது ப்ரீமியம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பிரச்சனை குறைவு
இந்தப் புதிய சேவையால் வாடிக்கையாளர்கள் சுலபமாகச் சமுக இடைவெளியை கடைப்பிடிக்க முடியும். இதைத் தாண்டி தேவையில்லாமல் போன் நம்பர், ஈமெயில் ஐடி, போஸ்புக் ஐடி கொடுக்க வேண்டி அவசியம் இல்லை, தேவையில்லாமல் போன் கால் பெற வேண்டிய அவசியம் இல்லை என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

திருமணங்கள்
கொரோனா தொற்றின் காரணமாகத் தற்போது அதிகளவிலான திருமணங்கள் இருவீட்டாரின் முக்கிய நபர்களை வைத்து மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் மக்கள் மொத்த திருமணத்தையும் ஜூம் கால் மூலம் ஒளிபரப்பு செய்கின்றனர்.