ஒவ்வொரு ஆண்டும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் பணக்காரர்களின் பட்டியல் மற்றும் சாதனை படைத்த பெண்களின் பட்டியல் ஆகியவற்றை வெளியிடும். இந்த ஆண்டும் தொடர்ந்து 20-வது முறையாக 100 சாதனைப் பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றவர்களில் 4 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்த பட்டியல் மூலம் கடந்த ஆண்டில் அரசியல், வணிகம், பொழுதுபோக்கு, அதிக அளவில் நன்கொடை வழங்கியவர்கள் என பல்வேறு துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்திய பெண்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் இந்திய கோடீஸ்வரரும், அதிக அளவில் நன்கொடை வழங்கியவருமான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 60வது இடத்தைப் பிடித்துள்ளார்.

உலகளாவிய IT சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமான HCL டெக்னாலஜிஸ்-இன் தலைவராக இருக்கும் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, 2009-ஆம் ஆண்டு முதல் HCL நிறுவனத்தில் உள்ளார். 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது தந்தையான ஷிவ் நாடாரிடம் இருந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சுமார் ரூ.3.18 லட்சம் கோடி சந்தை மதிப்பு இருக்கும் ஒரு நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பில் மட்டுமல்லாமல், சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி போர்டிலும் தலைவராக உள்ளார்.
இந்தியாவின் பணக்கார தொழில்நுட்ப தலைவரான ஷிவ் நாடாரின் ஒரே குழந்தை தான் ரோஷ்னி நாடார். ஷிவ் நாடாரின் நிகர மதிப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவரப்படி 27.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்புக்கு ரூ.2.27 லட்சம் கோடியாகும். தனது தந்தையின் வழியில் ரோஷ்னி நாடார் சிறந்த தலைமைத்துவத்தை கொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.
அதோடு ரோஷ்னி நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார். இந்த அறக்கட்டளை இந்தியாவில் கல்வியை மாற்றி அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது மற்றும் பல முதன்மையான நிறுவனங்களை நிறுவுவதற்கும் முக்கிய பங்காற்றி வருகிறது. அதோடு வனவிலங்கு பாதுகாப்பில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் ரோஷினி நாடார். 2018-ஆம் ஆண்டு இந்தியாவின் பூர்வீக வனவிலங்குகளின் வாழ்விடங்களை பாதுகாப்பதற்காகவே "தி ஹாபிடேட்ஸ்" என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவினார். அனிமல் பிளானட் மற்றும் டிஸ்கவரிக்கான ஆன் தி பிரிங்க் என்ற தொலைக்காட்சித் தொடரையும் தயாரித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மிகவும் அழிந்து வரும் வனவிலங்கு இனங்களை டெலிகாஸ்ட் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications